
சென்னை,
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி உள்பட மொத்தம் 14 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இதேபோல், சென்னை, தஞ்சாவூர், திண்டிவனம், சேலம் ஆகிய இடங்களில் 12 தனியார் சட்டக் கல்லூரிகளும் உள்ளன. இந்த இடங்கள் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 3,024 இடங்கள் உள்ளன.
அதே நேரத்தில், திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திலும், சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை தனியாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.