
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
1. முதல-அமைச்சரின் "உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்" திட்டத்தின்கீழ், ரூ.250 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
2. முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ், நடப்பாண்டில் 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
3. முதல்-அமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின்கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
4. புறவழிச் சாலைகள்;
ஆத்தூர் நகர் மற்றும் ஓசூர் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
5. இணைப்புச் சாலைகள்;
தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி, இராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம் பாலம் ஆகிய மூன்று இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
6. உயர் மட்ட பாலங்கள் (HLB):
ஆறுகளின் குறுக்காக தங்குத்தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.
7. ரெயில்வே திட்ட பணிகள்:
ரெயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 ரெயில்வே மேம்பாலங்கள் / ஒரு கீழ்பாலம் ரூ.787 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
8. கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்.
9. நடை மேம்பாலம் அமைத்தல்;
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அருகே நடை மேம்பாலம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
10. கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 1,000 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்ட சாலைகளாக (ODR) தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
11. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வெள்ளிமலை - சின்னதிருப்பதி ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
12. சுற்றுலா மேம்பாடு
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 10 கி.மீ. நீள சுற்றுச் சாலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
13. நில எடுப்புப் பணிகள் (புறவழிச் சாலைகள் / இணைப்புச் சாலைகள்)
நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆறு புறவழிச்சாலைகள் மற்றும் நான்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ.285 கோடி மதிப்பீட்டில் நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
14. காலதாமதமின்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 2 இரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
15. விரிவான திட்ட அறிக்கை;
நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 15 புறவழிச்சாலைகள் / இணைப்புச் சாலை / சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
16. சுற்றுலா தலமான ஏற்காடு மலைக்கும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கும் மாற்றுப்பாதைகள் அமைக்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
17. திருப்பூர் மாநகருக்குப் புறவழிச்சாலை அமைக்கவும், தூத்துக்குடி நகரில் இணைப்புச் சாலை அமைக்கவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
18. எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரையிலான கடல்வழி இணைப்புப் பாலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் இணைப்புச் சாலை அமைக்க, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் ரூ.4 கோடி மதிப்பீட்டில், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
19. சென்னை பெருநகர பகுதியில், உயர்மட்ட பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க ரூ.258 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
20. சென்னை பெருநகர பகுதியில், பாடி அருகே "U'' வடிவ சேவை சாலையும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுப்படுத்த ரூ.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.