திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான சடையங்குப்பம் ஏரி உள்ளது. இதன் அருகில் தனியார் ஒருவரின் காலி நிலம் உள்ளது. இங்கு, கழிவுகளை கொட்டி வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், கரும்புகை சூழ்ந்து சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு மற்றும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக, மணலி மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் தென்னவன், உதவி பொறியாளர் விஜய் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தன்ர. அப்போது, தனியார் ஓருவர் மாநகராட்சி அனுமதியின்றி தனது இடத்தை குப்பை கிடங்காக பயன்படுத்தி வந்தது தெரிந்தது.
மேலும், அந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு 3 லாரிகளில் கழிவுகள் கொண்டு வந்திருப்பது தெரிந்தது. அதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், 3 லாரியையும் பறிமுதல் செய்து, சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், மாநகராட்சியின் அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவுகள் கொட்டிய சம்பந்தப்பட்ட தனியாருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் ஐசிஎப் நிறுவனத்தில் பயன்படுத்தும் கழிவுகளை இந்த இடத்தில் அனுமதியில்லாமல் கொட்டியதால் பொதுமக்களுக்கு பாதிப்பும், சாடையங்குப்பம் ஏரி மாசடையும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 27ம் தேதி, கழிவுகளை கொட்டிய சம்பந்தப்பட்ட தனியார் மீது சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கழிவுகளை கொட்டியதால் லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளோம். இதுபோல் மாநகராட்சி அனுமதியில்லாமல் நிறுவன கழிவுகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.
The post சடையங்குப்பம் ஏரி அருகே அனுமதியின்றி கழிவுகளை கொட்டி எரித்தவருக்கு ₹1 லட்சம் அபராதம்: 3 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.