
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் கடந்த 16ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் டெல்லி வெற்றி பெற்றது.
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சரை பவுலிங் செய்ய வைக்கலாம் என்று சஞ்சு சாம்சனும், சந்தீப் சர்மாவை பவுலிங் செய்ய வைக்கலாம் என்றும் ராகுல் டிராவிட்டும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் - ரியான் பராக்கை கேப்டன் சஞ்சு சாம்சன் முன்னிலைப்படுத்தியதாகவும், ஆனால், டிராவிட் ஹெட்மயரை முன்னிலைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது கருத்தை ஏற்காமல் ராஜஸ்தான் அணி நிர்வாகம் செயல்பட்டதால், ராகுல் டிராவிட் நடத்திய ஆலோசனையில் கூட சஞ்சு சாம்சன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.
இதனால் ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், சாம்சனுக்கும், தனக்கும் இடையில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், இருவரும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம் எனவும் டிராவிட் கூறியுள்ளார். இது தொடர்பாக டிராவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது,
எனக்கும் சஞ்சு சாம்சனுக்கும் பிரச்சனையா?. இதுபோன்ற தகவல் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது என்றே தெரியவில்லை.. நானும் சஞ்சு சாம்சனும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம். சூப்பர் ஓவரின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் போது சஞ்சு சாம்சனும் உடனிருந்தார். நாங்கள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் குழு, அனலிஸ்ட் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்தே முடிவுகளை எடுத்தோம்.
அந்த முடிவுகள் எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. பிரத்யேக நிபுணர்கள் எடுக்கும் முடிவுகளும் கூட சரியாக இருக்கும் என்பது கிடையாது. ஆனால், எங்கள் அணி மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சனின் முடிவுகளுக்கும் அனைத்து ஆதரவும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.