சங்கீத வடிவில் எழுந்தருளும் நாயகி!

1 day ago 2

கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா

சென்ற இதழின் தொடர்ச்சி…

இப்போது இந்த உபாசனை என்பது வெறும் வெளிப்புறமாக (external) உபாசனையாக இல்லாமல், நாமே யந்த்ரமாக மாறுவது மட்டுமல்லாமல் இந்தப் பிரபஞ்சமே யந்த்ரமாகத் தெரிய வேண்டுமெனில், உடனே இது நடந்துவிடுமா? இது நடக்க வேண்டுமெனில், அதற்கு சூட்சுமமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டு மல்லவா… அப்போது இந்த process – இதை எது சாதித்துக் கொடுக்குமெனில், யந்த்ரத்திற்கும் நமக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகுதான் நாம் யந்த்ரமாக மாற முடியும். அப்போது இந்த இணைப்பை யார் ஏற்படுத்துவார்கள். எது ஏற்படுத்துமெனில் மந்த்ரம் ஏற்படுத்தும்.

இன்னும் modern terminolgyல் சொல்ல வேண்டுமெனில், இந்த மந்த்ரம் என்பது இங்கு password மாதிரி. சிறிய லேப்டாப்பை திறக்க வேண்டுமென்றால் கூட ஏதோ ஒரு பாஸ்வேர்ட் கேட்கிறது. ஒரு செல்போன் என்பது இங்கு யந்த்ரம். இதை உபயோகப்படுத்துகிற யந்த்ரீ யாரெனில் நாம்தான் அதற்கு யந்த்ரீ. இதை திறந்தவுடனே பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்தால் அதை நம்மால் இயக்க முடியும். அப்போது இந்த யந்த்ரத்தையும் யந்த்ரீயை இணைக்க வேண்டுமெனில் அங்குவொரு பாஸ்வேர்ட் தேவைப்படுகின்றது. அந்த பாஸ்வேர்ட் எதுவென்றால் அதுதான் மந்த்ரம்.

இதற்கு முந்தைய நாமத்தில் நாம் யந்த்ரத்தினுடைய பெருமையை பார்த்தோம். இந்த நாமாவானது நமக்கு மந்த்ரத்தினுடைய பெருமையை காண்பித்துக் கொடுக்கிறது. கேய சக்ர ராதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா… என்கிற இந்த நாமமானது நமக்கு மந்த்ரத்தை காண்பித்துக் கொடுக்கிறது. ஏனெனில், இந்த நாமத்தில் அம்பிகைக்கு மந்த்ரிணீ என்று பெயர்.

அம்பிகையினுடைய ராஜ்ஜியத்தில் லலிதா திரிபுரசுந்தரி மஹாராணியாக இருக்கிறாள். ஷியாமளா என்பவள் மந்த்ரிணீயாக இருக்கிறாள். சூட்சுமமாகப் பார்த்தால் மந்த்ரி என்கிற ஸ்தானத்தில் இருப்பதால் மட்டும் அவளுக்கு மந்த்ரிணீ என்று பெயர் கிடையாது. மந்த்ர ரூபமாக இருப்பதால் அம்பாளுக்கு மந்த்ரிணீ என்று பெயர். அதனால்தான் மாதங்கியை அர்ச்சனை செய்யும்போது, மந்த்ரிண்யை நமஹ… என்றும் மந்த்ர நாயிகாயை என்கிற நாமத்தினாலும் அர்ச்சிப்பதுண்டு. அவள் மந்த்ரிணீயாக மட்டுமல்ல. மந்த்ரத்திற்கு தலைவியாக இருக்கிறாள்.

அப்படி மந்த்ரிணீயாக இருக்கிற அம்பாள் எங்கு இருக்கிறாள் எனில், கேய சக்ர ரதத்தில் இருக்கிறாள். கேயம் என்கிற வார்த்தைக்கு சில அர்த்தங்கள் இருக்கிறது. கேயம் என்றால் பிரசித்தி பெற்றது. புகழ் பெற்றது என்றெல்லாம் பொருள். ஒருவர் ஏதோ ஒரு விஷயத்தில் புகழ் பெற வேண்டுமெனில், இந்த ஜென்மத்திலோ அல்லது பூர்வ ஜென்மத்திலோ செய்த மந்த்ர சித்தி அவருக்கு புகழைக் கொடுக்கும். அப்போது இந்த மந்த்ரத்திற்கு தலைவியாக இருப்பதினால், அந்த சக்ரத்திற்கு கேய சக்ரம். புகழை தரக்கூடிய ரதம் என்று பெயர். புகழ் பெற்ற ரதம் என்றும் பெயர். இது ஒரு அர்த்தம்தான்.

இன்னொரு அர்த்தம் என்னவெனில், கேயம் என்றால் பாடல் என்றும், பாட்டு என்றும் பொருள். அம்பிகையானவள் ராஜ மாதங்கி, ராஜ ஷியாமளா என்று சொன்னாலே அம்பாள் சங்கீதத்திற்கு உரியவள் என்பது பொதுவானதாகும். லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் செய்பவர்களுக்கு இது நிச்சயம் தெரியும். அதனால்தான் சதா காலமும் அம்பாள் கையில் வீணை வைத்திருக்கிறாள். ராஜமாதங்கியினுடைய நாமாவில் சங்கீத யோகின்யை என்கிற நாமம் ஒன்று உள்ளது. எனவே, சங்கீதம் பாட்டுக்குரியவள் இவளே ஆவாள். எனவேதான், அந்த ரதத்திற்கே கேய சக்ரம் என்று பொருள்.

அம்பிகையினுடைய இந்த ரதத்தில் விதம்விதமான மணிகள் ஒலிக்குமாம். அப்போது அந்த ரதத்தில் வரும்போது, மணி சத்தங்களெல்லாம் சேர்ந்து ஒரு பாடலை (கேயம்) உண்டாக்கும். ஆனால், இதையும் தாண்டி சூட்சுமமாக பார்க்கும்போது அந்த ரதமே சங்கீத வடிவாக, பாடல் வடிவாக இருக்கிறது. அதற்குள் இருக்கின்ற அம்பாள் எப்படி இருக்கிறாளெனில், மந்த்ரிணீயாக இருக்கிறாள். மந்த்ர வடிவாக இருக்கிறாள். அம்பாள் மந்த்ர வடிவாக இருக்கிறாள். அந்த சக்ர ராஜ ரதம் கேயம் என்கிற பாடல் வடிவாக இருக்கிறது. சங்கீத வடிவாக இருக்கிறது.

இது நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கிறது?

நமக்கு உபாசனையில் குருநாதர் ஒரு மந்த்ரம் கொடுக்கிறார். அந்த மந்த்ரத்தை ஜபம் செய்கிறோம். மூல மந்திரத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சொல்லக்கூடாது என்பது விதி. குருநாதர் சொன்னால்தான் வெளியே சொல்ல வேண்டுமென்பது விதி. இந்த மந்த்ரத்தை ஜபம் செய்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. சில நேரங்களில் அந்த மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லலாம். சில நேரங்களில் இந்த மந்திரத்தை நமக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டும். நாக்கு மட்டும் அசைவதுபோல் சொல்லிக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் இந்த மந்த்ரத்தை மனம் மட்டும் அசைவதுபோல் , எதுவுமே தெரியாதபடிக்கு மானசமாக ஜபம் செய்ய வேண்டும். இதைத்தான் உபாம்சு , மானசம்… என்றெல்லாம் அழைப்பார்கள். இதில் மிகவும் உயர்ந்தது வாய் திறந்து உச்சரிக்காமல் மானசம் என்கிற மனதிற்குள்ளேயே சொல்லுதல்.

குருமுகமாக ஒரு மந்திரத்தைப் பெற்று அந்த மந்திரத்தை ஒரு உபாசகன் இப்படியெல்லாம் ஜபம் செய்கிறான். Internal process என்கிற உள்முகமாக ஜபித்தலுக்கு இது சரியே. ஏனெனில், மானச ஜபம் செய்யும்போதுஅவனுடைய மனதும் அடங்குகிறது. அந்த மனசு அடங்கும்போது என்ன ஆகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். மந்த்ரிணீ ராஜ ஷியாமளா எங்கிருந்து வந்திருக்கிறாள் எனில், மனோ ரூபேஷு கோதண்டா… என்கிற அம்பாளினுடைய கோதண்டத்திலிருந்து கரும்பு வில்லிலிருந்துதான் மாதங்கி உத்பவம் ஆகியிருக்கிறாள். அந்த கரும்பு வில்லே மனதினுடைய சொரூபம்தான்.

இந்த உபாசகனுக்கு என்ன ஆகிறதெனில், மனம் உள்ளே போய்போய் மனசே மந்த்ரிணீயாகின்றது. மாதங்கியாக மாறிவிடுகின்றது. ராஜ ஷியாமளாவாக மாறிவிடுகின்றது. இது Internal process ஆகும். இதைத்தான் யோகிகள், மகான்கள், சித்தர்களெல்லாம் செய்கிறார்கள். இதே மனதும் வெளிப்புறமாக செல்கிறதே. Internal ஆக கொண்டு போவதற்கு மந்த்ரம் இருக்கிறது. ஆனால், external ஆக செல்லும் மனதை எப்படி திருப்புவது. அப்படி வெளியே செல்லும் மனதிற்கு வேறு வழியே இல்லையா. இதற்கு வழி என்னவெனில், அம்பிகையே இதற்கொரு வழியை காண்பிக்கிறாள்.
(சுழலும்)

The post சங்கீத வடிவில் எழுந்தருளும் நாயகி! appeared first on Dinakaran.

Read Entire Article