சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்கால தடை

4 weeks ago 6

புதுடில்லி,

இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதையொட்டி, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சூழலில், மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் 'எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக அவதூறான கருத்துகளை டி.எம். கிருஷ்ணா கூறி வருவதால், சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது' என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 19ம் தேதி தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடைவிதித்து மியூசிக் அகாடமிக்கு நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தனக்கு நினைவிடம், தனது பெயரில் அறக்கட்டளை அமைக்கக்கூடாது என சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ள நிலையில், அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது என தெரிவித்தனர். மேலும் சுப்புலட்சுமியை, டி.எம்.கிருஷ்ணா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 10 ஆண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், விருது வழங்கக்கூடாது என தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், சொத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும், விருதுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பெயரை பாடகர் டிஎம் கிருஷ்ணா பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, மெட்ராஸ் மியூசிக் அகாடமி உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

#BREAKING | 'சங்கீத கலாநிதி' விருது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...https://t.co/oiK0ockFxA#sangitakalanidhiaward | #Supremecourt | #ThanthiTV

— Thanthi TV (@ThanthiTV) December 16, 2024
Read Entire Article