சங்கராபுரம் அருகே காப்புக்காட்டில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை

2 weeks ago 5

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி-சங்கராபுரம் செல்லும் சாலையின் அருகே உள்ள காப்புக்காட்டில் ராயசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (39) என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு, உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடபொன்பரப்பி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொலை சம்பவம் நடந்த இடத்தில் பல்வேறு தடயங்களை கைப்பற்றினர். பின்னர் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும் இச்சம்பவம் நடைபெற்ற இடங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலை போலீசார் பாதுகாப்புடன் அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.

திடீரென அங்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் வெங்கடேசன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், உடலை வாங்க முடியாது எனவும் கூறி பிரம்மகுண்டம்-வடபொன்பரப்பி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறிலியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் சாலை மறியலில் ஈடுபட்ட வெங்கடேசனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலில் சுமார் 15 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதற்கான காயங்கள் உள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சங்கராபுரம் அருகே காப்புக்காட்டில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை appeared first on Dinakaran.

Read Entire Article