சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே விவசாயி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே விவசாயி உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதால் பதற்றம் நிலவுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த சிங்கராஜ் மகன் ஆபிரகாம் (42). இவர், விவசாயம் செய்துவந்ததுடன் மாடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு வீட்டின் அருகே நின்ற ஆபிரகாமை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுபற்றி அறிந்ததும் சின்ன கோவிலான்குளம் போலீசார் சென்று ஆபிரகாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி எஸ்பி அரவிந்தன் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆபிரகாம் எதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா, வேறு எதுவும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையொட்டி அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆபிரகாம் கொலை ெதாடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆபிரகாமின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வாங்க மறுத்து வருவதால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் மற்றும் பெரியசாமியாபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
The post சங்கரன்கோவில் அருகே பயங்கரம்; விவசாயி சரமாரி வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுப்பு பதற்றம், போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.