சங்கரனும் நாராயணனும் இணைந்த கோலம்

1 month ago 7

உமை ஒரு பாகனான இறைவன் சங்கரநாராயணனாகக் காட்சி தரும் அற்புதத் திருத்தலம். இந்தக் கோலம் சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்று என்பார்கள். அம்பிகையின் தவத்தை மெச்சி இறைவன் அருளிய தலம். அண்மையில் குடமுழுக்கு நடந்து, மண்டல அபிஷேக பூஜை நடந்து வரும் இச்சமயத்தில் இத்திருக்கோயிலை தரிசிப்போம். ஊரே சுவாமியின் பெயரில் தான் அமைந்திருக்கிறது. துவக்கத்தில் சங்கர நயினார் கோயில் என்று வழங்கப்பட்ட பெயர் தான் சங்கரன் கோயிலாக அமைந்திருக்கிறது. உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கி.பி.1022ல் கட்டப்பட்ட இத்திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் அமைந்திருக்கிறது.

புற்றின் பக்கத்தில் சிவலிங்கம்

மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் புன்னைவனக் காவலராக இருந்தார். கரிவலம் வந்த நல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னை வனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவரே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவர் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப்பட்டது. அப்போது அவர் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டார். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினார். திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்க முடையவர். காவல் ஆள் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது.

பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவல் ஆள் ஓடி வந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தார். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், வால் இழந்த பாம்பினையும் கண்டார். உடனே பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோயில் கட்டிச் சங்கரநயினார் கோயில் ஊரையும் தோற்றுவித்தார். கோயிலில் கோபுரத்தைத் தாண்டியதும் (கோயில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில) காவல் ஆளின் திருவுருவத்தை இப்போதும் காணலாம். சித்திரை விழா ஆரம்ப மாகு முன்பு, காவல் ஆளுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.

அம்பாளுக்குத்தான் முக்கியம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வைணவத்தில் சிறப்பு பெற்ற ஸ்தலம். சங்கரன்கோவில் சைவத்தில் சிறப்பு பெற்ற ஸ்தலம். ஆனால் இவை இரண்டுக்கும் இன்னொரு முக்கியமான ஒற்றுமை உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீரங்க மன்னாரும் சங்கரன் கோயிலில் ஸ்ரீசங்கரலிங்க நயினாரும் சுவாமியாக இருந்தாலும், கிராம மக்கள் அம்பாளுக்குதான் முக்கியம் கொடுக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை ஆண்டாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில் என்று சொல்வது போலவே சங்கரன்கோயிலை ஆவுடையம்மன் கோயில் என்றும் தவசு கோயில் என்றும் அழைக்கின்றனர். காரணம், இந்தக் கோயிலின் திருவிழாக்களிலேயே உச்சத் திருவிழா ஆடித்தபசு திருவிழா. தவம் செய்துதானே இறைவனை அடைந்தாள் அம்பிகை. ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. ஆகையினால் மக்களுக்கு அம்பிகையின் மீது அபாரமான பக்தி.

இணையும் ராமாயணக் கதை

பெரும்பாலான சிவன் கோயில்களிலே ஏதோ ஒரு வகையிலே ராமாயணக் கதை இணையும். இத்தலத்திலும் ஒரு ராமாயணக் கதை இணைகிறது. இந்திரன் மகன் ஜெயந்தன்.  காட்டில் சீதையும் ராமனும் தனியாக இருக்கின்ற பொழுது ஜெயந்தன் காம எண்ணத்தோடு ஒரு காகத்தின் வடிவெடுத்து சீதையைத் தொல்லைப்படுத்த, இதை அறிந்த ராமன் பக்கத்தில் கிடந்த தர்ப்பையை பிரம்மாஸ்திரமாக அதன் மீது ஏவ, அவன் மூவுலகமும் அடைக்கலம் கேட்டு அலைந்தான். கடைசியில் சீதையின் காலடியில் விழுந்தான். சீதை அவனை மன்னித்து ராமனின் திருவடியில் விழுமாறு செய்து காப்பாற்றினாள். ஆனாலும் அவன் கண் அஸ்திரத்தால் போயிற்று.

“மூவுலகும் திரிந்தோடி, வித்தகனே ராமாவோ
நின்னபயம் என்றழைக்க
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர்
அடையாளம்’’
– என்று பெரியாழ்வார் இந்நிகழ்வை பதிவு செய்கிறார்.

எப்படியோ உயிர் பிழைத்த ஜெயந்தனுக்கு காகத்தின் உருவம் மாறவில்லை. கண் பார்வையும் வரவில்லை. இந்திரன் ஆலோசனைப்படி ஒரு முத்து மாலையுடன் இந்தத் தலத்துக்கு வந்து சங்கர லிங்கத்துக்கு முத்து மாலையை அணிவித்து சாப விமோசனம் பெற்றான் என்று இத்தல புராணக் கதை ஒன்று சொல்கிறது. இன்னும் பல சுவையான தல புராணக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தலத்தை ஒட்டி கோவில்பட்டி, எட்டயபுரம் முதலிய ஊர்கள் எல்லாம் இருக்கின்றன. அதனால் பாரதிக்கு இத்தலத்து அம்பிகையின் மீது ஈடுபாடு அதிகம். கோமதி மகிமை என்ற தலைப்பில் சில தோத்திரப் பாடல்களை இயற்றியிருக்கின்றார்.

சஹஸ்ராரம் விழுந்த பகுதி

பார்வதிதேவியின் தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.

சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம், சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின. அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீகோமதி அம்மன் சந்நதி ஆகும்.

பொதுவாக அம்பாள் சதி இறைவன் சந்நதிக்கு பக்கத்திலேயே இருக்கும். ஆனால் இங்கே திருக்கோயிலின் வடபுறத்தில் தனிக் கோயிலாக வழங்குகிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி என உண்டு.ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு ஏந்தியவளாக, இடது கையை பூமியைநோக்கி தளர விட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூஷிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள். மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும். அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, காமேஸ்வரியாக காட்சி தருகிறாள்.

அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன. அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும், யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கப்பெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும்
கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன், நெல்லை காந்திமதி அம்மன் என இந்த மூன்று அம்பாள்களையும் இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்திகளாக சித்தரிப்பர். கோமதி அம்மன் சந்நதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்திருக்கிறது. இதைப் பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதீனம் பத்தாவது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக ஸ்வாமிகள். இந்த ஸ்ரீ சக்கரம் பதித்துள்ள பள்ளத்தில் அமர்ந்து அம்மையை தியானம் செய்யலாம். எதை எண்ணுகிறோமோ அந்தக் காரியம் நிறைவேறும். பிணிகள் அகலும். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், இங்கே 11 நாட்கள், தொடர்ச்சியாக காலை மாலை வழிபட்டால் மகப்பேறு கிட்டும்.

பூப்பாவாடையும், தங்கப்பாவாடையும் வாரத்தில் திங்கட்கிழமை மாலை பூப்பாவாடையும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை தங்கப்பாவாடையும் அம்மனுக்கு சாற்றப்படுகிறது. மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் தங்கப்பாவாடை அணிவிக்கப்படுகிறது. தமிழ் மாத பிறப்பன்று இரவு 7 மணிக்கு தங்கப் பாவாடை சாத்தி தங்கத்தேர் பக்தி உலா நடைபெறுகிறது. இங்கு தங்க ஊஞ்சல் கொண்ட பள்ளியறை ஒன்று உண்டு. அந்த பள்ளி அறையில் மரகதக்கல் பதிக்கப்பட்டுள்ளது. மேற்கு பிரகாரத்தில் கலைமகளும் திருமகளும் காட்சி தருகின்றனர்.

சங்கரநாராயணர் சந்நதி

சுவாமி சந்நதிக்கும் அம்பாள் கோயிலுக்கும் நடுவே சங்கரநாராயணர் சந்நதி தனிச் சந்நதியாக உள்ளது. தனிக்கோயில் என்றும் சொல்லலாம். காரணம், இதற்கும் கர்ப்ப கிரகம் அர்த்த மண்டபம் மகாமண்டபம் சுற்று மண்டபம் என இருக்கின்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடம் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கர நாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். சங்கரநாராயணர் சந்நதியில் வசனகுழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. தெய்வீக சக்தி மிகுந்தது. பேய் மற்றும் பில்லி சூனியத்துக்கு ஆளான பலர் இந்த வசன குழியில் அமர்ந்து பூஜை செய்து பலன் பெறுகின்றார்கள்.

நாகராஜர் சந்நதி

இங்கு இரண்டு தேர்கள் உள்ளன. ஒன்று சுவாமியின் தேர். மற்றொன்று அம்பாளின் தேர், சுவாமியின் தேர் பெரியது அம்பாளின் தேர் சற்றுச் சிறியது.
சித்திரை திருவிழா ஒன்பதாம் நாள் பெரியதேரும் ஆடித்தபசு விழாவில் ஒன்பதாம் நாள் அன்று அம்பாள் தேரும் உலாவரும். இங்கு இருக்கும் நாகராஜர் சந்நதி மிகச் சிறப்பு வாய்ந்தது. அதன் அருகில் பாம்பு புற்று ஒன்று உள்ளது. அதை சுற்றி கோயில் எழுப்பி இருக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகராஜருக்கு பால் பழம் படைத்து தோஷம் நீங்கி நிவாரணம் பெறுகிறார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.

பொதுவாகவே இறைவனைத் தரிசிப்பதற்கு முன்னால் அம்பாளைத் தரிசித்துவிட்டுச் செல்லுகின்ற வழக்கம் என்பது எல்லா இடத்திலும் உண்டு. ஆனால் இங்கே கோமதி அம்மனைப் பார்ப்பதற்கு முன்னால் மீனாட்சியம்மனை தரிசித்து வரவேண்டும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. காரணம், கோமதி அம்மன் மதுரை மீனாட்சி அம்மனின் சகோதரியாக  கருதப்படுகின்றாள்.

கோமதி அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. சிலர் ஜோதிட தோஷம் நீங்குவதற்காக பெற்ற பிள்ளையைத் தத்து கொடுத்து வாங்கிக் கொள்ளுகின்றார்கள்.
இந்தச் சந்நதியில் வேண்டுதல் பெட்டி ஒன்று இருக்கிறது. நாகதோஷம் மற்றும் தேள் முதலான விஷ ஜந்துக்களின் தொல்லை நீங்க, வெள்ளி மற்றும் தாமிரத் தகடுகளை இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இங்கு உண்டு.

சிலர் செவ்வரளி மலர்களைப் பரப்பி இரட்டை தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுகின்றார்கள். 30 நாட்கள் வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்.கோயில் வழிபாட்டு நேரம்: காலை 5.30 முதல் நண்பகல் 12.15 வரை, மாலை 4.00 முதல் 9.30 வரை.எப்படி செல்வது?: தென்காசி மாவட்டத்தில் இருந்து சுமார் 39 கி.மீ., தூரம் பயணித்தால் சங்கரன்கோவிலை அடைந்துவிடலாம்.

சங்கரன்கோவில், தென்காசி

1. ஸ்ரீசங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் அன்னை தவம் இயற்றினாள். ஆடி பௌர்ணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் அன்னை கோமதிக்கு சங்கர நாராயண தரிசனம் கிட்டியது. இதை ஒட்டி ஆடித் தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

2. விழாவின் 11ஆம் நாள் இறைவன், இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார்.

3. அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.

4. பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளை குமாரியாகவும், குண்டலினி சக்தியாகவும், பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார். எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு-கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.

5. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன் கோவில் விளங்குகிறது.

6. கோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது. சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது.

7. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது.

8. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது. தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.

9. சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது.

10. அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

திருவிழாக்கள்

* சித்திரை பிரமோற்சவம்.

சித்திரை பிரமோற்சவம் (48 நாட்கள்) ஒவ்வொரு ஏப்ரல் மாதமும்.

* ஆடித் தபசு

ஆடித் தபசு திருவிழா (12 நாட்கள்)
ஒவ்வொரு ஆகஸ்டு மாதமும்.

* ஐப்பசி திருக்கல்யாணம்
ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா
(10 நாட்கள்) ஒவ்வொரு அக்டோபர் மாதமும்.

* தெப்பத் திருவிழா

தெப்பத் திருவிழா – தை கடைசி வெள்ளி ஒவ்வொரு பிப்ரவரி மாதமும்.

முனைவர் ஸ்ரீராம்

The post சங்கரனும் நாராயணனும் இணைந்த கோலம் appeared first on Dinakaran.

Read Entire Article