சகோதரியின் கணவரை கொலை முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு ஒடுகத்தூர் அருகே முன்விரோத தகராறில்

1 week ago 2

வேலூர், பிப்.1: ஒடுகத்தூர் அருகே முன்விரோத தகராறில் சகோதரியின் கணவரை கொலை செய்ய முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே அத்திக்குப்பம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(50), விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த விநாயகம்(45) என்பவரின் சகோதரி சுஜாதா என்பவரை பல ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின் சுஜாதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விநாயகத்துக்கும், பாலகிருஷ்ணனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பாலகிருஷ்ணனுடன், விநாயகம் மற்றும் அவரது தரப்பினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விநாயகம் கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விநாயகம் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்று வந்த காலக்கட்டத்தில் குற்றவாளிகளில் ஒருவர் இறந்து விட்டார். இந்நிலையில் நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் சகோதரி சுஜாதாவின் கணவர் பாலகிருஷ்ணனை கொலை செய்ய முயன்ற விநாயகத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார். அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் மற்றொருவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கே.சம்பத் ஆஜராகி வாதாடினார்.

The post சகோதரியின் கணவரை கொலை முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு ஒடுகத்தூர் அருகே முன்விரோத தகராறில் appeared first on Dinakaran.

Read Entire Article