?வீட்டு வரவேற்பறைக்கு பச்சை நிற வண்ணம்தான் பூச வேண்டும் என்கிறார்களே?
– சொஸ்திகா, கொச்சின்.
பச்சை நிற வண்ணம் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. பச்சை நிறம் என்பது புதன் கிரஹத்திற்கு உரியது. சூழலுக்கு ஏற்ப செயல்படும் திறனை புதன் கிரஹம் நமக்குத் தரும். நம் வீட்டிற்குள் வரும் நபர் எந்த மனநிலையில் இருந்தாலும், அதனை செம்மைப் படுத்தும் தன்மை பச்சை நிறத்திற்கு உண்டு. அதனால்தான் வரவேற்பறைக்கு பச்சை நிறத்தை பரிந்துரைக்கிறார்கள். இந்தக் கருத்து ஏற்புடையதே.
?சகோதரர்கள் ஒன்றாக வீடு கட்டலாமா?
– சங்கரராமன், திருக்கோவிலூர்.
சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே வீட்டினைக் கட்டி அதில் கூட்டுக்குடும்பமாக வாழ்வது சாலச் சிறந்தது. இந்தக் காலத்தில் அதெல்லாம் சரியாக வராது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நீங்கள்கூட சகோதரர்கள் ஒரே நேரத்தில் தனித் தனியே வீடு கட்டலாமா என்றுதான் கேட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். தாராளமாக ஒரே நேரத்தில் வீடு கட்டலாம். ஆனால், கிரகபிரவேசத்தை தனித் தனியேதான் செய்ய வேண்டும். மூத்தவர் முதலிலும் இளையவர்கள் அடுத்தடுத்தும் வரிசையாக வெவ்வேறு நாட்களில் கிரகபிரவேசத்தைச் செய்ய வேண்டும். இந்த விதியானது ஒரே தெருவில் வீடு கட்டும்போது மட்டுமே பொருந்தும். வெவ்வேறு பகுதிகளில் வீடு கட்டுவார்களேயாயின், மூத்தவர் முதலில் புதுமனை புகுவிழா செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் சௌகரியப்படி செய்து கொள்ளலாம். அதே நேரத்தில், ஒருவர் வீட்டு கிரகபிரவேசத்திற்கு மற்றவர்கள் அனைவரும் செல்ல வேண்டும். யாரும் யாரையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. வீடுகள் தனித் தனியே இருந்தாலும் மனதளவில் கூடி வாழ்ந்தால்தான் கோடி நன்மை என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.
?சனி மூலை என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
– பிரியா ராம்குமார், காஞ்சிபுரம்.
ஈசான்ய மூலை என்பது மருவி, சனி மூலை ஆகிவிட்டது. ஒரு வீடு அல்லது ஒரு மனையில் வடக்கும் கிழக்கும் இணைகின்ற வடகிழக்கு மூலையினை ஈசான்ய மூலை என்று அழைப்பார்கள். மொத்தமுள்ள எட்டு திசைகளில் அதாவது கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவற்றில் வடகிழக்கு திசைக்கு ஈசான்யம் என்று பெயர். அஷ்டதிக்பாலகர்களில் ஈசானன் என்பவரே அந்த வடகிழக்கு மூலையின் காவலன் என்பதால் அவரது பெயரிலேயே அந்த மூலையானது ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது.
?திருமாலின் மார்பில் கௌஸ்துபம் எப்படி வந்தது?
– பரத், திருச்செங்கோடு.
“கஸ்தூரி திலகம் லலாட பலகே
வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாசாக்ரே
நவமூர்த்திகம் கரதலே வேணும்கரே கங்கணம்’’
– என்று ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் திருமாலை வர்ணிக்கிறது.
தேவர்களும் அசுரர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொருட்களில் ஒன்றுதான் இந்த கௌஸ்துபம் எனும் ரத்தினம். இதனை திருமால் தனது மார்பில் அணிந்து கொண்டார் என்கிறது புராணம். பாற்கடலில் இருந்து தோன்றிய காமதேனு, மகாலட்சுமி, ஐராவதம் ஆகியவற்றைப் போலவே இந்த கௌஸ்துபம் என்கிற ரத்தினமும் மிகவும் சிறப்பு பெறுகிறது.
?ஒரு நபரின் பிறந்த தேதி, சொத்து வாங்குவதை பாதிக்கிறதா?
– ஒய்.வி.முத்துமாணிக்கம், புதுச்சேரி.
நிச்சயமாக பாதிக்காது. பிறந்த தேதியைக் கொண்டு சொத்து வாங்க முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்க இயலாது. எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவரால் சொத்து வாங்க முடியும். அவரது ஜனன ஜாதக அமைப்புதான் இதனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் லக்ன பாவம், நான்காம் பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் இவற்றின் பலம்தான் சொத்து வாங்கும் யோகத்தினைத் தரும். ஒரு சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் இருந்தாலும், அவர்களால் அதனை அனுபவிக்க இயலாமல் போகும். சொந்த வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு இவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பார்கள். இதனையும் அவர்களது ஜாதக பலம்தான் தீர்மானிக்கும். பிறந்த தேதி என்பது சொத்து வாங்குவதை நிச்சயமாக பாதிக்காது.
?இறந்தவர்களின் நேரம் சரியில்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை அடைத்துவிட்டு மூன்று மாதமோ ஆறு மாதமோ வெளியேறிவிட வேண்டும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்களே, இது சரியா?
– ஜி. குப்புசாமி, வேலூர்.
இதற்கு தனிஷ்டா பஞ்சமி என்று பெயர். இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திரங்கள் என்று தனிஷ்டா பஞ்சமியைப் புரியும்படியாக பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். ‘தனிஷ்டா’ என்ற சொல்லுக்கு அவிட்டம் என்று பொருள். அவிட்டம் நட்சத்ரம் முதலாக தொடர்ந்து வரும் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உயிர் துறந்தால் ஆறு மாத காலம் வரை வீட்டினைப் பூட்டி வைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு குறிப்பிட்ட காலம் வரை வீட்டினைப் பூட்டி வைக்க இயலாது என்பதால் இதற்கு பரிகாரமும் சொல்லப்பட்டிருக்கிறது. இறந்தவரின் கரும காரியங்கள் முடிந்த கையோடு வெங்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விடுத்து தானம் செய்ய வேண்டும். ஆறு மாத காலம் வரை உயிர் பிரிந்த இடத்தில் (வீட்டில்) தினசரி தீபம் ஏற்றி வைத்தாலே போதுமானது. வீடு மூட வேண்டிய அவசியமில்லை.
?வீட்டில் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும் என்கிறார்களே, உண்மையா?
– வாசுதேவன், ரெய்ச்சூர்.
உண்மைதான். தண்ணீர் என்பது மஹாலட்சுமியின் அம்சம். தண்ணீரை “ஆப:’’ என்றும் “அப்பு’’ என்றும் குறிப்பிடுவார்கள். தெலுங்கு மொழியில் அப்பு என்ற வார்த்தைக்கு கடன் என்று பொருள். ஆக, தண்ணீரை அளவுக்கதிகமாக செலவழித்தால் பொருட்செலவு என்பதும் அதிகமாகி, வீட்டில் தரித்திரம் என்பது தாண்டவமாடத் தொடங்கிவிடும். எக்காலத்திலும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. அப்படி தண்ணீரை வீணாக்குபவர்கள் இல்லத்தில் தரித்திரம் வந்து சேரும் என்ற கருத்து உண்மைதான்.
The post சகோதரர்கள் ஒன்றாக வீடு கட்டலாமா? appeared first on Dinakaran.