ஜோதிடரிடம் பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்யும் காலம் வந்துவிட்டதா என்று தெரிந்து கொள்ள ஜாதகம் காட்டுகின்றோம். அவர் பார்த்துவிட்டு, “குருபலம் வந்துவிட்டது தாராள
மாகச் செய்யலாம்” என்கிறார். இன்னும் ஒருவர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு “குரு பலம் இல்லை இப்பொழுது செய்யக்கூடாது. ஒரு வருடம் கழித்துச் செய்யலாம்’’ என்று சொல்லி அனுப்புகின்றார். குருபலம் வந்துவிட்டால் திருமணம் நடந்துவிடுமா? சுபகாரியங்கள் நடந்துவிடுமா? குரு பலம் இல்லாவிட்டால் சுபகாரியங்கள் நடக்காதா? என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்தால் சில உண்மைகள் நமக்கு விளங்கும். குருவின் பார்வை 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் இருந்தால், அது நல்ல பலன்களைத் தரும். குரு பலன் இருந்தால், பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.
ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் அழைக்கிறோம். இதெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது. ஆனால், நடைமுறையில் இந்த குரு பலம் சிலருக்கு வேலை செய்வதாகத் தெரிகிறது. பலருக்கு வேலை செய்வதாகத் தெரியவில்லை. அதுவும் இப்பொழுதெல்லாம் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் திருமணம் நடக்கும் காலம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. ஆணுக்கு 35 வயதிலும், பெண்ணுக்கு 30 வயதிலும் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதுவும் இப்பொழுது ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு என்றைக்கு பிள்ளைக்கு கல்யாணம் ஆகுமோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 35 வயதுக்குள் பலமுறை குருபலம் வந்து போயிருக்கும். ஆனாலும் திருமணம் நடப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். அவ்வளவு ஏன். என்னுடைய திருமணம் ராசிக்கு ஆறில் லக்கினத்துக்கு மூன்றில் குரு இருக்கும்போதுதான் நடைபெற்றது. இதில் இன்னொரு விஷயமும் பார்க்கலாம். ராசிக்கு ஆறில் குரு இருந்தால் ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தைப் பார்க்குமே, லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால் ஐந்தாம் பார்வையாக லக்கினத்திற்கு ஏழாம் இடத்தைப் பார்க்கணுமே என்றும் சொல்லலாம். ஜாதகத்தில் எப்படி வேண்டுமானாலும் சொல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்த அமைப்பு திரும்பத் திரும்ப வந்து கொண்டுதான் இருக்கும். ராசிக்கு எட்டில் குரு இருந்தாலும், குரு ராசிக்கு இரண்டாம் இடத்தையும் நான்காம் இடமான சுக ஸ்தானத்தையும் சயன ஸ்தானமான 12-ஆம் இடத்தையும் பார்க்கும். நம்முடைய கேள்வி எல்லார் ஜாதகத்திலும் இது அடிக்கடி சுழன்று சுழன்று வந்து கொண்டுதானே இருக்கிறது. எனவே ஒரு ஜாதகத்தில் குருபலன் மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறதல்லவா?அப்படியானால் அந்தக் காலத்தில் “குரு பார்க்க கோடி நன்மை; குருபலம் இருந்தால் சுக பலன் தேடி வரும்” என்றெல்லாம் சொல்லி வைத்ததற்கு என்ன காரணம்? இதை ஜோதிட ரீதியாகப் பார்த்தால், நமக்கு கிடைக்கும் விளக்கத்தைவிட ஆன்மிக ரீதியில் பார்த்தால் அதிக விளக்கம் கிடைக்கும். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பது வடமொழி சாஸ்திரத்திலும், தமிழ் மொழி சாஸ்திரத்திலும் சொல்லப்பட்ட உண்மை. ஒரு ஆன்மாவுக்கு கடைத்தேற்றம் செய்வதற்கு இந்த நான்கு பேரும் முக்கியம்.
மாதா உடல் கொடுத்தாள், உயிர் கொடுத்தாள்.
பிதா உணர்வையும் அறிவையும் தந்தார்.
ஆச்சாரியரான குரு ஞானத்தைக் கற்பித்து தெய்வத்தைக் காட்டினார்.
குரு என்பவர் தாய் தந்தைக்கும் மேலானவர் ஏன் ஒரு விதத்தில் தெய்வத் திற்கும் மேலானவர். எனவே ஒருவனுடைய நல்வாழ்வுக்கு அவருடைய பார்வை முக்கியம். இந்தப் பார்வையைத்தான் தீட்சை என்று சொன்னார்கள். குருவினுடைய அபிமானத்தை ஒருவன் பெற்றுவிட்டால், அவனுக்கு சகல சம்பத்துக்களும் கிடைத்துவிடும். திருமண விஷயத்துக்கே வருவோம். ஒரு காலத்தில் பெண்ணுக்கும் பையனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று சொன்னால், ஜாதகத்தைக் தூக்கிக் கொண்டு செல்ல மாட்டார்கள்.
குருவே படிப்பு முடிந்தவுடன் தகுந்த வரனைப் பார்த்து முடித்துவிடுவார். இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.
ஒருவருக்கு பெண்ணைத் தர வேண்டும் என்று சொன்னால், அவன் எந்த ஆசிரியருக்கு சீடனாக இருக்கிறான் என்பதுதான் முதல் தகுதியாகப் பார்க்கப்பட்டது. ராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சி. குரு விஸ்வாமித்திரர், ராம லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குப் போகிறார். அவர் தாடகை வதத்திற்கு மட்டுமா அழைத்துச் சென்றார்?
விஸ்வாமித்திரர் உலகத்தையே அழிக்கக் கூடிய வல்லமை படைத்தவர், திரிசங்கு சொர்க்கத்தையே படைக்கும் ஆற்றல் மிக்கவர், கேவலம் தாடகை வதம் செய்ய மட்டுமா ராம லட்சுமணர்களை அழைத்துச் செல்வார்? உண்மையான காரணம், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்காகத்தான் தாடகை வதம் முடிந்தவுடன் வந்த காரியம் முடிந்தது என்று அயோத்திக்கு இளவரசர்களை அனுப்பிவிடாமல் தன்னோடு மிதிலைக்கு அழைத்துச் சென்று, ராமர் சீதை திருமணத்தை முடித்து வைக்கிறார். அப்போது இளவரசர்
களைப் பற்றி ஜனகரிடம் தெரிவிக்கும் பாடல் ஒன்று உண்டு.
``திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்!
உறை ஓடும் நெடு வேலாய்! உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை வளர்த்தானும் வசிட்டன்காண்’’.
– அருமையான பாட்டு.
“தசரதன் நால்வர்க்கும் தந்தை ஆயினும் இக்குமாரர்களின் நன்மையை நாடிச் சகல கலைகளிலும் வல்லவராகுமாறு வளர்த்தமையால் வசிட்டனே உண்மைத் தந்தை” என்றார். ராமனுக்கு இரண்டு குருமார்கள். ஒருவர் வசிஷ்டர். இன்னொருவர் அவர் வாயால் மகரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்திரர். இந்த இரண்டு குருக்களின் பார்வையால்தான் சீதா ராமர் திருமண வைபோகம் நடைபெற்றது. உண்மையான வியாழ நோக்கம் குரு பார்வை என்பது இதைத்தான். திருமணம் செய்து வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குரு ஸ்தானத்திற்கு உரியவர்கள். அந்த பலம்தான் குருபலம் என்பது.
அந்த காலத்தில் குருவானவர் தனது சீடனுக்கு உரிய பெண்ணைத் தேடிச் சென்று பெண் கேட்டுவிட்டால் அவன் அரசனே ஆனாலும் பெண் கொடுக்கத் தயங்க மாட்டான். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி 50 ஆண்டு காலங்களுக்கு முன்னால் வரை குருவின் நிலையில், இரண்டு குடும்பத்தையும் அறிந்த ஊர் பெரியவர்கள், பெண் படைத்தவர்களிடம் சென்று, பிள்ளையைப் பற்றியும், பிள்ளை குடும்பத்தாரிடம் பெண்ணைப் பற்றியும் பரிந்துரை செய்து, சில நேரத்தில் சமாதானப்படுத்தியும் திருமணம் செய்து வைத்தார்கள். அப்பொழுது ஜாதகங்கள் பெரும்பாலும் பார்க்கப்படுவதில்லை. தெய்வ சங்கல்பம், குருவருள், நல்ல மனம் இவைகளே முக்கியமாகக் கருதப்பட்டன. இந்த குரு பலம் இருந்துவிட்டால், அந்த (ஜாதக) குருபலம் அவசியமில்லை.
தேஜஸ்வி
The post சகுன சாஸ்திரம் திருமணங்களும் குருபலனும் appeared first on Dinakaran.