சகல வளங்களையும் தரும் புவனேஸ்வரி

3 months ago 20

நங்கநல்லூர் ‘ஆதி வ்யாதிஹர’ ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி ஆலய நிர்மாண கைங்கர்யத்தில், நான் பூரணமாக ஈடுபட்டிருந்த காலம் (1994-ஆம் வருடம் ).
கார்த்திகை மாதம், ஒரு சனிக்கிழமையன்று மதிய நேரம்… இல்லத்தில் உணவருந்தி விட்டு, ஓய்வாக அமர்ந்திருந்தேன் , என்னையும் அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். அப்போது, மலர்ந்த முகத்துடன் என் கனவில் தோன்றிய சத்குரு ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள், ‘என்ன தாசனே! ரொம்ப நாளாச்சே… ஸ்கந்தாஸ்ரமம் பக்கமே காணோம்! மறந்தாச்சோ?’ என்று உரிமையுடன் கேட்டு விட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்தேன். மனசு நிறைந்திருந்தது. உடனே அன்று மாலையே புறப்பட்டு விட்டேன். இரவு, சேலத்தில் தங்கினேன். மறுநாள் ஞாயிறு காலையில், ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்தேன். தூரத்திலேயே என்னைப் பார்த்துவிட்ட சத்குருநாதரின் முகத்தில் தெய்வீகச் சிரிப்பு!நான், கரங்களை மேலே உயர்த்தி நமஸ்கரித்தபடியே ஸ்வாமிகளின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன்.

சற்று நேரம் வைத்த கண் வாங்காமல், புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர் திருவாய் மலர்ந்தார்: “என்ன தாசனே, ரொம்ப நாளா கண்லயே படலியே! இன்னிக்கு என்ன… அதிசயமா இருக்கே! நேத்திக்கு ஏதாவது சொப்பனம் வந்ததோ?” என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் வியர்த்து விதிர்த்துப் போய், மீண்டும் தடாலென அவரின் பொற் பாதங்களில் நமஸ்கரித்தேன் !அவர் சிரித்தார் . உடனே, “சத்தியம் குருநாதா! நேத்திக்கு மத்தியானம் கனவு கண்டுதான் இப்போ இங்கே வந்துருக்கேன்! அது எப்படி தங்களுக்கு – என்று நான் முடிப்பதற்குள், அவரே பேசினார்: “ஏண்டாப்பா… ஏன் தெரியாது? கனவுல வந்ததே நான்தானே!” என்று கூறிய அந்த தீர்க்கதரிசி பலமாகச் மீண்டும் சிரித்தார்!

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை; திகைத்து நின்றேன். பிறகு, என்னை சமாளித்துக் கொண்டு கூறினேன்: “உண்மைதான்குருநாதா! நேத்திக்கு மத்தியானம் சாப்பிட்டு, கொஞ்சம் கண்ணயர்ந்த நேரத்துல நீங்க கனவுல வந்து, ‘ஸ்கந்தாஸ்ரமம் பக்கமே காணோமே… மறந்தாச்சோ’னு கேட்டேள்.

அதனாலதான்…”நான் முடிப்பதற்குள், “புறப்பட்டு வந்தியாக்கும்! இப்படி கனவுல வந்தாதான் வரணும்னு தோணும் போலருக்கு!” என்றார் சிரித்தபடி.
அனைத்தும் அறிந்த அந்த தெய்வத்திடம் என்ன பதில் கூறுவதென எனக்கு புரியவில்லை மௌனமாக நின்றேன்.

குருநாதரே மௌனம் கலைத்தார்
“காத்தால டிபன் சாப்பிடலயே நீ?”
“இல்லை குருநாதா!”
“இன்னிக்கு காலையில வெண் பொங்கலும், கத்திரிக்கா கொத்சும் பண்ணியிருக்கு. மொதல்ல போய்
சாப்பிட்டு வா!” – என்றார் !

காலைச் சிற்றுண்டியை முடித்து நான் திரும்பியபோது குருநாதரைத் தரிசிக்க நல்ல கூட்டம். ஒவ்வொருவராக அழைத்துப் பேசி அனுப்பிக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். நான், ஒரு தூணில் சாய்ந்தவாறு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

மதியம் பன்னிரண்டு மணி. கூட்டம் மறைந்திருந்தது. ஒரு சிலரே இருந்தனர். சத்குருநாதர் என்னை அழைத்தார். எழுந்து சென்று நமஸ்கரித்தேன்.
“நங்கநல்லூர்ல கோயில் வேலையெல்லாம் சிறப்பா நடந்துண்டிருக்கா?” என்றார் .

“நடந்துண்டிருக்கு குருநாதா” என்றேன்.“உத்தேசமா மகா கும்பாபிஷேகம் எப்போ நடத்தறதா தீர்மானம்?”
“அடுத்த வருஷத்துக்குள்ள எப்படியும் நடத்திடணும்னு பிரயத்தனப்படறோம். குருநாதர்தான் அருள் புரியனும் .” என்றேன். உடனே ஸ்வாமிகள் சந்தோஷத்துடன், “நல்லா நடக்கும் என்றார். பிறகு, “அது சரி… அங்கே யந்த்ர பிரதிஷ்டா வைபவம் எப்போ நடந்தது?” என ஆவலுடன் கேட்டார். “1992-ஆம் வருஷம், பிப்ரவரி 16-ஆம் தேதி யந்த்ர பிரதிஷ்டை நடந்தது குருநாதா!” என்றேன்.

“அன்னிக்கு புனர்வசு (புனர்பூசம்)
நட்சத்திரமோ?”
“ஆமாம் ஸ்வாமி” என்றேன் ஆச்சரியத்துடன்! ஸ்வாமிகள் கேள்வியைத் தொடர்ந்தார்: “அது சரி. அங்கே பிரதிஷ்டையாகப் போற ஆஞ்சநேய ஸ்வாமி ஏகமுகம் தானே?”
“ஆமாம் குருநாதா.”“ஆனா பிரதிஷ்டா யந்த்ரம் மாத்திரம் பஞ்சமுகம் போல இருக்கே!” என்றார் .“ஆமாம் குருநாதா! ஆதார பீடத்துல பிரதிஷ்டை பண்ணினது பஞ்சமுக ஹனுமத் யந்திரம்தான்” என்று சொன்னேன் .

சத்குருநாதர் அதோடு விடவில்லை. “அது இருக்கட்டும். மூணு வருஷத்துக்கு முன்னாடி … தொண்ணூறுன்னு ஞாபகம்… அந்த யந்திரத்தை எடுத்துண்டு, பத்துப் பன்னிரண்டு பக்தாளோட பல க்ஷேத்திரங்களுக்கு யாத்திரையா போய்ட்டு, ஸ்கந்தாஸ்ரமத்துக்குக்கூட வந்தேள் போலருக்கே!” என்று புருவங்களைச் சற்று உயர்த்தி, சிரித்தபடியே கேட்டார் . ‘நடந்து முடிந்து விட்ட யந்திர பிரதிஷ்டை குறித்து ஸ்வாமிகள் ஏன் இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறார்?’ என்று புரியாமல் நான் தவித்தேன்.

ஸ்வாமிகள் தொடர்ந்தார்: “ஒனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருதானு பார்! அந்த பெரிய பஞ்சமுக ஹனுமந் யந்த்ரத்தை வாங்கி, என் மடிமேல வெச்சுண்டதும் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன தெரியுமா? இப்ப சொல்றேன் கேளு… சாட்சாத் பஞ்சமுக ஹனுமனே ஒரு ‘குழந்தையா வந்து மடியில ஒக்காந்திருக்காப்ல உணர்ந்தேன். அப்படி ஒரு ஜீவ களையோடு கூடிய யந்த்ரம் அது! யந்த்ர தளங்கள்ல இருந்த ஒவ்வொரு கிரந்த – அட்சரத்தையும் ஒண்ணு விடாம வாசிச்சேன். ‘எவ்வளவு சிரத்தையா இதை உருவாக்கியிருக்கா’னு ரொம்பப் பெருமைப்பட்டேன். ‘இவ்வளவு அற்புதமான யந்த்ரத்தை தயார் பண்ணினவா யாரு’னு ஒங்கிட்ட அப்ப கேட்டேன்.

அப்போ… ‘ஆனதாண்டவபுரம் ராமதாஸ் ஐயரும், இதோ என் பக்கத்துல நிக்கறாரே மருத்துவக்குடி சுந்தரேச ஜோஸ்யர்… இவா ரெண்டு பேரும் சேர்ந்துதான் தயார் பண்ணினா’னு நீ சொன்னது இன்னமும் ஞாபகத்துல இருக்கு! என்ன, நா சொல்றதெல்லாம் சரிதானே?” எனக் கேட்டார் ஸ்வாமிகள்.
பிரமித்து நின்ற நான் ‘சரிதான்’ என்று தலையாட்டினேன்! மேற்கொண்டு ஒன்றும் பேசத் தோன்றவில்லை!

சத்குருநாதரே தொடர்ந்தார்: “அந்த பரம சாந்நித்தியமான யந்த்ரத்தின் ‘பிரதி’ ஒண்ணு நம்ம ஸ்கந்தாஸ்ரமத்தில் இருக்கணும்னு என் மனசுல பட்டுது. உடனே, ‘இந்த பஞ்சமுக ஹனுமத் யந்த்ரத்தோட பிரதி ஒண்ணு எடுத்து எங்கிட்ட சேர்ப்பிச்சுடு’னு ஒங்கிட்ட சொன்னேன். நீயும் பலமா தலையாட்டியபடி, ‘உத்தரவு குருநாதா’னு சந்தோஷமா சொல்லிட்டுதான் நகர்ந்தே!
யந்த்ர பிரதிஷ்டையும் முடிஞ்சு போச்சு! ஆனா இன்னி வரைக்கும் யந்த்ர பிரதியை நீ தரவே இல்லே! அது, உன் தப்பு இல்லேங்கறதும் எனக்குத் தெரியும். உன் கூட வந்த ஒருவர், ‘ரமணி… ஆஞ்சநேய சுவாமிக்குனு நாம தயார் பண்ண யந்த்ரத்தை அடுத்தவாளுக்கெல்லாம் கொடுக்கப்படாது. அதோட சாந்நித்தியம் குறைஞ்சுடும்’னு உங்கள்ல ஒருத்தர் சொன்னார். அவர் யாருன்னும் தெரியும்!” என்றார்.

என் கண்களில் நீர் கசிந்தது. உடம்பு நடுங்கியது! அப்படியே சத்குருநாதரின் திருவடிகளில் விழுந்து, அழுதேன். மேற்கொண்டு நான் திக்கித் திணறி பதிலசொல்ல முற்படுவதற்குள், ஸ்வாமிகளே கூறினார்: “தர்மத்தை ஏழைக்கும், தானத்தைப் பற்றற்றவனுக்கும் பண்ணுனு பெரியவாள்லாம் சொல்லுவா. அந்த யந்த்ர பிரதியை நான் வெச்சுண்டு என்ன பண்ணப போறேன்! அவசியம்னா உலக க்ஷேமத்துக்காகப் பயன்படுத்துவேன்… வேறென்ன?” என்றவர், ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரை அருகே அழைத்தார்.

அவரிடம், “உள்ளே, அலமாரியில் இருக்கிற ‘மந்த்ர மஹோததி’ புஸ்தகத்தை எடுத்துண்டு வா!” என்றார். அந்தப் புத்தகம் ஸ்வாமிகளிடம் சமர்ப்பிக்கப் பட்டது. அதைத் தன் கையால் புரட்டி இரண்டு காகிதங்களை வெளியில் எடுத்துப் பிரித்துக் காண்பித்தார். பிறகு, “இவை இரண்டும் என்னனு தெரியறதா ஒனக்கு?” என்று கேட்டார்.

நான் உற்றுப் பார்த்தேன். ஒன்று, நங்கநல்லூர் பஞ்ச முக ஹனுமத் யந்த்ரத்தின் கையெழுத்துப் பிரதி! மற்றொரு காகிதத்தில், கிரந்த லிபியில் வரிசையாக ஏதோ எழுதப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “சத்குருநாதர் என்னை மன்னிச்சுக்கணும்னு. அனந்தகோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள். மொதல்ல பண்ணிக் கேட்டுக்கறேன். எனக்கு ஒரே அதிசயமா இருக்கு! நாங்க யாரும் கொடுக்காமலே நங்கநல்லூர் பஞ்சமுக ஹனுமத் யந்திர பிரதி ஒங்க கைக்கு எப்படி வந்ததுனு என்று அடியேன் முடிப்பதற்குள், “தெரிஞ்சுக்க ஆசைப்படறே, அப்படித்தானே என்ற ஸ்வாமிகள் சிரித்தார். பிறகு “ஒனக்கு புதுக்கோட்டை டாக்டர் வைத்தீஸ்வர சாஸ்திரிகளைத் தெரியுமா?” என்று கேட்டார். “நன்னா தெரியும் குருநாதா” என்றேன்.

“அப்படியானா, நீ ஒரு காரியம் பண்ணு. புதுக்கோட்டைக்குப் போய் பெரியவர் வைத்தீஸ்வர சாஸ்திரிகளைப் பாரு. அவருக்கு இதன் விவரங்கள் தெரியும்! அவர் ஒனக்குச் சொல்வார்” என்று கூறி உத்தரவு கொடுத்தார். நமஸ்கரித்துப் பிரசாதம் பெற்றுப் புறப்பட்டேன்.அன்று மாலையே புதுக்கோட்டை டாக்டர் வைத்தீஸ்வர சாஸ்திரிகள் இல்லத்தில் இருந்தேன்.“வாங்கோ, வாங்கோ!” என்று முகம் மலர வரவேற்ற வைத்தீஸ்வர சாஸ்திரிகள், “என்ன விஷயமா வந்திருக்கேள்?” என்று வினவினார்.
அவரிடம், அனைத்தையும் விவரித்தேன்.

சுவாரசியமாகக் கேட்டுக் கொண்ட சாஸ்திரிகள், “இது, பரம ரகசியமான சமாசாரம்! இருந்தாலும் சத்குருநாதரே தெரிஞ்சுக்கச் சொல்லி அனுப்பியதால் சொல்றேன்… நீங்களும் மனசுல மட்டும் வெச்சுக்கணும்!” என எச்சரித்து விட்டு, அருகில் இருந்த வாசல் திண்ணைக்கு என்னை அழைத்துச் சென்றார்.அங்கு அமர்ந்ததும் சாஸ்திரிகள் தொடர்ந்தார்: “மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள்… சத்குருநாதர் அவசர அவசரமாக என்னைக் கூப்பிட்டார். நானும் உடனே ஸ்கந்தாஸ்ரமத்துக்கு போனேன்.

அங்கு, தனியே ஓர் அறைக்கு அடியேனை அழைச்சுண்டு போன ஸ்வாமிகள், ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கச் சொன்னார். பிறகு, தன் ரெண்டு கண்களையும் மூடிண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எனக்கு வெலவெலத்துப் போச்சு! ஜடாமகுடதாரியாக சாட்சாத் பரமேஸ்வரனே ஒக்காந்திருப்பது போல இருந்தது!

மூடிய கண்களைத் திறக்காமல், ‘இப்போ நா சொல்லிண்டு வர்றதை அப்படியே ஒண்ணு விடாம சம்ஸ்கிருதத்துல எழுதிக்கணும்’னு உத்தரவு போட்டுட்டு சொல்ல ஆரம்பிச்சார். நானும் கடகடன்னு எழுதி முடிச்சேன்! பிறகு, ஸ்வாமிகள் கண்களைத் திறந்ததும், ‘சத்குருநாதா, இப்போ நீங்க சொன்னது… பஞ்ச முக ஹனுமத் பரமான ‘யந்த்ரோத்தாரக’ (யந்த்ரம் எழுதுவதற்கான மூல ஸ்லோகம்) ஸ்லோகம் மாதிரி இருக்கே’னு கேட்டேன். அவர், எல்லா விவரங்களையும் அடியேனிடம் கூறினார்!” பேச்சை சற்று நிறுத்தி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சாஸ்திரிகள்.

எனக்குப் பொறுமையில்லை. “அது சரி சாஸ்திரிகளே… நங்கநல்லூர் பஞ்சமுக ஹனுமத் யந்திரத்தோட ‘யந்த்ரோத்தாரக’ மூல ஸ்லோகத்தை தனக்குச் சொன்னது யாருனு சத்குருநாதர் ஏதாவது சொன்னாரா?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

“சொன்னார்!”“யாராம்?”
எனது இந்தக் கேள்விக்கு, டாக்டர் வைத்தீஸ்வர சாஸ்திரிகள் கண்களில் நீர் கசிய பதில் சொன்னார்:“சாட்சாத் ஸ்ரீபுவனேஸ்வரி அம்பிகையாம்!” இதைக் கேட்டு பிரமித்து நின்றேன். வாழும் திருவுருவாய் உயர்ந்து நிற்கும் – அந்த சத்குருநாதர் வசிக்கும் திசையை நோக்கி பெரிதாக வணங்கினேன்.

ரமணி அண்ணா

The post சகல வளங்களையும் தரும் புவனேஸ்வரி appeared first on Dinakaran.

Read Entire Article