‘‘இலைகட்சி கோஷ்டி பூசல் நாளுக்குநாள் அதிகரித்து திரும்ப திரும்ப புகார்கள் பறந்து வருவதை கண்டு கடுப்பாகி விட்டாராமே சேலத்துக்காரர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘டெல்டாவில் இலை கட்சியில் கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.. ஒருவர் மீது ஒருவர் புகார்களை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார்களாம்.. இந்த விஷயத்தில் சேலத்துக்காரர் தலையிட்டு, இனி பிரச்னை செய்யாமல் கட்சி வேலையை பாருங்கள் என உத்தரவிட்டுள்ளாராம்..
ஆனாலும், மறுபடியும் புகார்கள் பறந்துக்கிட்டே இருக்காம்.. இதனால் டென்ஷனான சேலத்துக்காரர், நேரம் வரும் போது, சில வேலைகளை செய்ய உள்ளாராம்.. வயதில் குறைவாக உள்ள அந்த நபரிடம் நாங்கள் கட்சி வேலைகளை கேட்டு செய்ய ேவண்டுமா? என மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகிறார்களாம்.. அடுத்தடுத்து கோஷ்டி பூசலால் இலை கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பவர்புல் நண்பர்களின் அட்டூழியம்பற்றி நிர்வாகிக்கு ரகசிய கடிதம் பறந்து இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தை ஒட்டிய யூனியன் பிரதேசத்தில் ஐபிஎஸ்களுக்கு பஞ்சமில்லையாம்.. டெல்லியில் இருந்து படையெடுத்துள்ள வடக்கிற்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம்.. ஆனால் தமிழக காக்கிகள் ரவுடிகள் மீது காட்டும் வேகத்தில் கால்வாசி கூட புதுச்சேரி காக்கிகள் காட்டுவதில்லையாம்.. இதனால், உள்ளூர்வாசிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. இது ஒருபுறமிருக்க காக்கியில் பவர்புல் அதிகாரியின் நண்பர்கள் போர்வையில் சிலர் வணிகங்களில், உணவகங்களில் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபடுகிறார்களாம்..
நாங்கள் யார் தெரியுமா? என கேட்டு மிரட்டல் விடுக்கிறார்களாம்.. அந்த கூத்துக்களை காரில் இருக்கும் பவர்புல் ஆனவர், புல்லாக அமர்ந்திருப்பதால் வேடிக்கை மட்டுமே பார்க்கிறாராம்.. இதுபற்றி வணிகம் தரப்பில் மாநில நிர்வாகிக்கு ரகசிய கடிதம் பறந்திருக்கிறதாம்.. ஏற்கனவே, கடல் ஊரை ஒட்டிய பாக்கம் பகுதியில் இதே நண்பர்களின் விளையாட்டால் சர்ச்சை ஏற்பட்டிருந்தும் இன்னும் திருந்தியபாடில்லை என்ற புலம்பல்தான் காக்கி வட்டாரத்தில் கேட்கிறதாம்..என்றார் விக்கியானந்தா.
‘‘சம்பாதித்தவர்கள் ஒதுங்க, இல்லாதவனை போட்டு வேலை செய்ய சொல்றதா புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோடை தொடங்கிருச்சி. வெயிலை கட்டுப்படுத்தும் வகையில் தண்ணீர் பந்தலை திறங்கோன்னு இலைக்கட்சி தலைவர் உத்தரவு போட்டிருக்காரு.. அதோடு நில்லாம அவரது வீட்டு பக்கத்துலயே மோர் பந்தலை திறந்தும் வைச்சாராம்.. ஆனால் அதன்பிறகு ஒருவர் கூட தண்ணீர் பந்தலை திறக்கலையாம்.. பதினைந்து பகுதி செயலாளர்கள், 132 வட்டச்செயலாளர்கள் இருந்தும் யாரும் தண்ணீர் பந்தலை திறக்க முன்வரலையாம்.. மாங்கனி மாநகரை சேர்ந்த ரெண்டு பேர் பொறுப்பாளராக இருக்காங்களாம்..
போட்டோவுக்கு மட்டும் ஒன்றாக நின்று சிரிக்கும் இவர்கள், கேமரா கிளிக் சத்தம் கேட்டவுடன் திரும்பிருவாங்களாம்.. இதை சொல்லி சொல்லியே கட்சிக்காரங்க சிரிக்காங்க.. மம்மி பிறந்தநாளையொட்டி நலத்திட்டங்களை வழங்கி நல்ல பெயர் எடுக்கப்போறேன்னு சொன்ன புதிய நிர்வாகிகள் ஷாக்காகி அப்படியே நிக்காங்களாம்.. ஆயிரம் புடவையை ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பேன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல் வாங்கி வீட்டிலேயே வச்சிருக்காராம் ஒரு நிர்வாகி.
ஆனால் பொறுப்பாளர்கள் விழாவுக்கு தேதி கொடுக்கலையாம்.. அப்படி என்னதான் வேலை செய்றாங்களோன்னு திசை தெரியாமல் தொண்டர்கள் திகைக்கிறார்களாம்.. கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக ெசால்லிக்கொண்டாலும் யாரும் சுதந்திரமாக வேலை செய்ய முடியலையாம்.. தும்முவதற்கு கூட மேலிடத்தில் அனுமதி கேட்கணுமாம்.. எந்த நிர்வாகியிடம் சொல்லி தண்ணீர் பந்தலை திறக்கச் சொல்வதுன்னு தெரியாமல் பொறுப்பார்கள் தவிக்கிறாங்களாம்.. சம்பாதித்தவர்கள் அனைவரும் ஒதுங்கிட்டாங்க.
இல்லாதவனை வேலை செய் வேலை செய் என்றால் எங்கே போய் செய்வது என நிர்வாகிகள் புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கம்பெனிகளில் சோதனை என்ற பெயரில் மனைவியின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப சொன்னாராமே இஎஸ்ஐ மருத்துவர் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவர் ஒருவர் மீன்வலை தயாரிப்பு கம்பெனிகளில் சோதனை என்ற பெயரில் சென்று வசூலில் ஈடுபட்டாராம்..
அதிலும் உஷாராக தனது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் பணம் அனுப்புங்கள் என்றாராம்.. இதற்கு மாவட்ட உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்திக்கொண்டாராம்.. அவர் சொல்லித்தான் இதனை செய்கிறேன்னு பில்டப் வேறு கொடுத்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் இவரது செயல்பாடுகளில் சந்தேகம் எழ பாதிக்கப்பட்ட மீன்வலை தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட உயர் அதிகாரியிடம் சென்று வங்கி கணக்கு விவரங்களுடன் புகார் அளித்தனராம்..
புகாரை பெற்ற உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ மருத்துவரை போனில் அழைத்து லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.. ஏற்கனவே சுகாதார நிலையம் ஒன்றில் பணியாற்றியபோது கர்ப்பிணி பெண்ணிடம் தவறான முறையில் பரிசோதனை செய்ததால் அந்த பெண் தனது சிசுவையும் பறிகொடுத்து, தனது உயிரை காப்பாற்றவே போராட வேண்டியிருந்ததாம்.. அப்போது விசாரணையில் சிக்கினாலும் தப்பிய டாக்டர்தான் இவர். அதனால் தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று இப்போது வீர வசனம் பேசிக்கொண்டு இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post கோஷ்டி பூசல் அதிகரித்திருப்பதால் அதிருப்தியில் இருக்கும் சேலம்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.