அன்னூர்: கோவை அருகே போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சக்திவேல் (24). இவர் கோவையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவருக்கும் கோவை காளப்பட்டி விளாங்குறிச்சி ரத்தினகிரி தெருவை சேர்ந்தவர் ஹரிஸ்ரீ (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. ரவுடியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹரிஸ்ரீக்கும், சக்திவேலுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஹரிஸ்ரீ துப்பாக்கியால் சுட்டு விடுவதாக சக்திவேலை மிரட்டினார். இதுகுறித்து சக்திவேல் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் ஹரியை நேற்று கைது செய்தனர். அவரிடம் துப்பாக்கி குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஹரிஸ்ரீ நாட்டுத்துப்பாக்கியை கோவில்பாளையம் செறையாம்பாளையம் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்ட போலீசார் ஹரியை செறையாம்பாளையம் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுப்பதுபோல் நடித்த ஹரிஸ்ரீ துப்பாக்கியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப
முயன்றார்.
இதனால் தற்காப்புக்காக போலீசார் ஹரியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவரை பிடித்து போலீஸ் வேனில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஹரிஸ்ரீ மீது ஏற்கனவே காளப்பட்டி பகுதியில் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஆயுத தடை சட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கோவையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு appeared first on Dinakaran.