கோவை: இன்று அரசு விழாவிற்காக கோவை வருகை தந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளின் மனுவை வழங்கினேன். இதில் ஒரு சில கோரிக்கைகளை பற்றி அறிவிப்புகளை இன்று முதல்வர் வெளியிட்டு இருக்கிறார் அதற்காக கோவை தெற்கு தொகுதி மக்களுடைய சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடர்பாக உள்ள சிக்கல்களை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று விரைந்து முடிப்பதாக உறுதியளித்தார்.
* மெட்ரோ இரயில்:
கோவை மெட்ரோ திட்ட நடைமுறையில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan) மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை (Alternative Analysis Report) ஆகிய ஆவணங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்பிக்காததே தாமதத்திற்கு காரணம் என தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. எனவே, கோவை நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
* நடைமேடை (Escalator)
காந்திபுரம் மேம்பாலம் சிக்னல் அருகில் பொதுமக்கள் நடப்பதற்கு ஏதுவாக நடைமேடை (Escalator) அமைக்க வேண்டும்.
* விஸ்வகர்மா யோஜனா திட்டம்
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இலட்சக்கணக்கான கைவினை கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும். மற்ற மாநிலங்களில் அமல்படுத்துவதைப் போல தமிழகத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்
* வாகன நிறுத்தம் மற்றும் வணிகவளாகம்:
கடைவீதிகள் நிறைந்த பகுதியான ராஜவீதி, காந்திபுரம் மற்றும் டவுன்ஹால் ஆகிய இடங்களில் ஓர் பல்லடுக்கு வாகன நிறுத்தகம் தேவைப்படுகிறது. தண்டு மாரியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள பழைய வணிக வளாகத்தை இடித்துவிட்டு ஒரு புதிய வணிகவளாகம் அமைக்க வேண்டும்.
* தங்க நகை பூங்கா:
தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனையில் கோவை சிறந்து விளங்குகின்றது. வீடில்லா தொழிலார்களுக்கு குடியிருப்பு வசதி மற்றும் தங்க நகை உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்க தங்க நகை பூங்கா ஒன்று ஏற்படுத்தி தரவேண்டும்.
* போக்குவரத்து வசதி
காந்திபுரம், அரசு மருத்துவமனை, பெரிய கடை வீதி, டவுன்ஹால், உக்கடம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது அவற்றை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்து கொண்டிருக்கக் கூடிய மேம்பால பணிகளை துரிதமாக முடிக்குமாறு கேட்டுக்கொளகிறேன். உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை புதிதாக கட்டப்பட்டுவரும் மேம்பால பணியினை நீலாம்பூர் வரை நீடிக்க வேண்டும்.
* சாலை வசதி
வார்டு எண் 69 பாரதி பார்க் ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு ஆகிய பகுதிகளில் புதிதாக சாலை அமைக்க வேண்டும். வார்டு எண் 70 சுக்கிரவார்பேட்டை மா.நா.க வீதி தியாகி குமரன் ஆகிய வீதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். வார்டு எண் 67 ராம் நகர் பகுதியில் அனைத்து சாலைகளையும் சரி செய்து தர வேண்டும். வார்டு எண் 82 CMC காலனி பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
* சாக்கடை வசதி:
சலிவன் வீதி, தாமஸ் வீதி, இடையார் வீதி, தெலுங்கு வீதி சந்து, கைகோல் வாத்தியார் சந்து ஆகிய பகுதிகளில் பல வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட UGD லைன்களை மறு சீரமைத்து தர வேண்டும். வார்டு 69 காமராஜபுரம் பகுதியில் குடியிருப்புக்குள் சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் தேங்கி நிற்கிறது ஆகையால் சாக்கடைகளை ஆழப்படுத்தி அகலப்படுத்த வேண்டும். வார்டு 70 லிங்கப்ப செட்டி வீதி, தெப்பக்குளம் வீதி1,2,3 பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட நிலத்தடி வடிகால் லைன் பைப்புகள் சேதமடைந்து அருகில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கழிவு நீர் கசிவு ஏற்பட்டு குடிநீருடன் கலக்கின்றது. எனவே உடனடியாக புதிய நிலத்தடி வடிகால் அமைக்க வேண்டும்
* ஸ்மார்ட் சிட்டி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட குளங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பொதுமக்களுடைய முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
* வீட்டு வசதி மற்றும் பட்டா:
கோவை தெற்கு தொகுதி, சுங்கம் பகுதியில் உள்ள காந்தி நகர் மற்றும் மசால் லே அவுட், அம்மன் குளம் ஹைவேஸ் காலனி ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாய் மக்கள் வசிக்கும் நிலையில் தங்கள் குடியிருப்பு இடங்களுக்கு பட்டா இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே இவர்களுக்கு பட்டா விரைந்து வழங்க ஆவணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 2018ஆம் ஆண்டு, உக்கடம் மேம்பாலம் அமைக்க சி.எம்.சி காலனி பகுதி மக்களிடம் இருந்து குடியிருப்பு நிலம் பெறப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகியும், மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, குடிசை மாற்று வாரியத்திடம் நிலத்தை ஒப்படைக்காததால் சி.எம்.சி காலனி மக்கள் வீடின்றி அவதியுறுகின்றனர். அவர்களுக்கு வீட்டு வசதி கிடைத்திட உடனடியாக ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எனவே கோவை மக்களின் மேற்கொண்ட தேவைகளை தங்களின் மேலான கவனம் கொண்டு, அவற்றை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று வானதி சீனிவாசன் முதல்வரிடம் கொடுத்த மனுவில் இடப்பெற்றுள்ளது.
The post கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி appeared first on Dinakaran.