கோவை: கோவையில் போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 12 செல்போன்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட டாக்டர், வக்கீல், தொழிலதிபர்கள் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மெகா போதை கும்பலை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் (39), விநாயகம் (34), பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கிருஷ்ணகாந்த் (34), வடவள்ளியைச் சேர்ந்த பெண் எஸ்ஐ மகன் பைனான்சியர் மகாவிஷ்ணு (28), ஐஸ்கிரீம் கடை நடத்திவரும் ஆதர்ஸ் டால்ஸ்டாய் (24), நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஓட்டல்காரர் ரிதேஷ் லம்பா(41), டெக்ஸ்டைல் ஏஜென்சி நடத்தும் கிரிஷ்ரோகன் ஷெட்டி (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆர்எஸ் புரம் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருட்கள், பணம், கார், 12 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 12 செல்போன்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோரின் தொடர்பு எண்கள் இருந்தன. அதில் 50க்கும் மேற்பட்டோர் டாக்டர், வக்கீல், தொழிலதிபர்கள் என்பது தெரியவந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போதை கும்பலுடன் இவர்களுக்கு என்ன தொடர்பு?, என்ன பேசினார்கள்?, போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். அவர்களிடம் நடத்தும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
1 கிராம் விலை 10 ஆயிரம் ரூபாய்
கோவையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 92 கிராம் கொகைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பேஸ்ட் வடிவில் இருந்த இதன் மதிப்பு 1 கிராம் ரூ. 10 ஆயிரம் ஆகும். இந்த உயர் ரக போதைப்பொருள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என போலீசார் தெரிவித்தனர்.
ரயில்வே ஊழியர்கள் உடந்தை
போலீசார் நடத்திய விசாரணையில், போதை பொருள் விற்பனை கும்பலுக்கு நைஜீரியாவை சேர்ந்த சிலர் மும்பையில் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளனர். இதனை வாங்க போதைப்பொருள் கும்பல் விமானத்தில் மும்பை சென்றுள்ளனர். அங்கு உயர் ரக போதைப்பொருளை வாங்கி பார்சல் மூலம் ரயிலில் கோவை அனுப்பி உள்ளனர். அதற்கு முன்பாக விமானத்தில் கோவை வந்து காத்திருந்து பார்சலை பெற்றுள்ளனர். போதைப்பொருள் கடத்தலுக்கு ரயில்வே ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post கோவையில் பெண் எஸ்ஐ மகனுடன் சிக்கிய போதை கும்பலுடன் டாக்டர், தொழிலதிபர்களுக்கு தொடர்பு: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு appeared first on Dinakaran.