கோவையில் புதிய ஐடி பார்க்: ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு, 10 நாட்களில் முதல்வர் திறந்து வைக்கிறார்

3 months ago 19

* ஸ்டார்ட் அப், குறு, சிறு நிறுவனங்கள், தொழில்முனைவோர் தொழில் தொடங்க வாய்ப்பு

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, தொழில் நகரமாகவும் திகழ்கிறது. ஜவுளி, வார்ப்படம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, இன்ஜினியரிங், பம்ப்செட், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோவை தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப துறையிலும் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் தங்களின் கிளைகளை துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் இருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி கோவையில் 744 ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐடி துறையில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை சரவணம்பட்டி, அவிநாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

கோவையின் அடையாளமாக ஐடி துறையை மாற்றவும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (எல்காட்) மூலம் தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றவும் முயற்சிகள் அரசின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை (2 இடங்கள்), திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 1,288.03 ஏக்கர் பரப்பில் ரூ.852.46 கோடி முதலீட்டில் 8 சிறப்பு பொருளாதார மண்டலங்களை எல்காட் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஐடி நிறுவனங்களுக்கான இடத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக, பொதுப்பணித்துறை மூலம்‌ கோவை விளாங்குறிச்சியில் தொழில்‌ நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில்‌ ரூ.114.16 கோடி மதிப்பில் புதிய தகவல்‌ தொழில்‌நுட்ப கட்டிடம்‌ கட்டும்‌ பணி நடந்து வருகிறது. இந்த புதிய தகவல்‌ தொழில்‌நுட்ப கட்டிடம்‌ 3.94 ஏக்கர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்டு வருகின்றது.

இந்த கட்டிடம்‌ 2 அடித்தளங்கள்‌, தரைத்தளம்‌ மற்றும்‌ ஐந்து மேல் தளங்களுடன்‌ மொத்தம்‌ 8 தளங்களுடன்‌ 27,379 சதுர மீட்டர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது அடித்தளத்தில் 37,369 சதுர அடியில் 77 கார்‌ மற்றும்‌ 60 இரு சக்கர வாகன நிறுத்துமிடமும், முதல் அடித்தளத்தில் 37,369 சதுர அடியில் 76 கார்‌ மற்றும்‌ 60 இரு சக்கர வாகன நிறுத்துமிடமும்‌ அமைக்கப்பட்டு உள்ளது. தரைத்தளத்தில் உணவு அருந்துமிடம்‌ மற்றும் பொது நிர்வாக அலுவலகம்‌, தகவல்‌ தொழில்நுட்ப அலுவலகத்திற்கான இட வசதி கட்டமைப்பு பணிகள் நிறைவுற்று பால்ஸ்‌ சீலிங், கண்ணாடி தடுப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்‌, இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் 5வது தளங்களில் தகவல்‌ தொழில்‌நுட்ப அலுவலகத்திற்கான கட்டமைப்பு பணிகள்‌ நிறைவடைந்து உள்ளது. இக்கட்டிடத்தில் 6 எண்ணிக்கையிலான பயணிகள்‌ மின்தூக்கிகள், 2 சேவை மின்தூக்கிகள்‌, தீயணைப்பு வசதிகள்‌, தொலை தொடர்பு வசதிகள்‌, கட்டிட மேலாண்மை அலுவலக வசதிகள், இடிதாங்கி வசதிகள்‌, மழைநீர்‌ சேகரிப்பு வசதிகள்‌,

தானியங்கி பண பரிவர்த்தனை வசதி, ஜெனரேட்டர்‌ அறை, பாதுகாப்பாளர்‌ அறை, 6 லட்சம் லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 லட்சம் லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட மேல்‌ நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 கேஎல்டி கழிவுநீர்‌ சுத்திகரிப்பு தொட்டி, கழிவறைகள்‌ ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில்‌ 158 கார்‌ மற்றும்‌ 151 இரு சக்கர வாகன நிறுத்துமிடம்‌ அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பிரதான பணிகள் முடிவடைந்து உள்ளது. ஒரு சில துணை பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகள் அடுத்த 2 வாரத்திற்குள் முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழில்நுட்ப கட்டிடத்தில் சுமார் 15 ஆயிரம் சதுர அடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, குறு,சிறு நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்சம் 3,250க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடர்பாக கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து 2 வாரத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ‘ஹப்’-ஆக கோவை மாறி வருவதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

* கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா பணி தீவிரம்
விவசாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில், தொழில் வளம் குறைவு, தொழிற்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் குறைவு. செய்யாறு சிப்காட் பகுதியை தவிர்த்து குறிப்பிடத்தக்க தொழிற் வாய்ப்புகள் இல்லாததால் இங்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை புதிய ரிங்ரோடு பகுதியில் கனத்தம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையில் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விழுப்புரம், திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் இருந்து எளிதில் வந்து செல்லும் வகையில் உள்ளதே தேர்வு செய்ததற்கான முக்கிய காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

ஆன்மிக அடையாளமே கொண்டு இருந்த திருவண்ணாமலை தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக மாற உள்ளது. இதேபோல், கரூர் – அரவக்குறிச்சி சாலை மற்றும் கரூர் – கோயம்புத்தூர் சாலை ஆகிய இரண்டு இடங்களில் டைடல் பார்க் அமைக்க 2.5 முதல் 5 ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.

* சேலம் மினி டைடல் பார்க்கில் முன்னணி நிறுவனங்கள் துவக்கம்
சேலம் சுற்று வட்டார பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் என்ற இடத்தில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, நம்ம ஆபீஸ், ஏகேஎஸ் ஹைடெக் ஸ்மார்ட், தமிழ் ஜரோஸ், டெல்த் ஹெல்த்கேர், அக்சஸ் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிறுவனங்கள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அத்துடன் மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் ெதாழில்நுட்பம் சார்ந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகளும் இந்த மினி டைடல் பார்க்கில் தங்களது நிறுவனங்களை தொடங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 70 சதவீத தள ஒதுக்கீடு முடிந்துள்ள நிலையில், இன்னும் சில முன்னணி நிறுவனங்கள் வரவுள்ளன. அதன்மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெறவுள்ளனர்.

The post கோவையில் புதிய ஐடி பார்க்: ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு, 10 நாட்களில் முதல்வர் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article