
கோவை,
கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்து வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப் (வயது 35), அவருடைய தம்பி லோதிப் அலி (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொரீப் 3 வருடமும், லோதிப் அலி ஒருவருடமும் தங்கி இருந்து வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மில் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்கி இருந்து வேலை செய்யும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களை கணக்கெடுக்க போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் மில்களில் கண்காணித்தனர். அப்போது அவர்கள் நேற்று வீரியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் சோதனை செய்தனர். அப்போது அந்த மில்லில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் பலர் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் 13 பேருக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. இதன் காரணமாக அந்த 13 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த 13 பேரையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வங்காளதேசத்தை சேர்ந்த பாப்லு (26), சமீர் (19), ஷேஹாக் (26), அல்அமீன் (24), ஜித்தோன் (22), சொரீப் (29), போனி (30), ரூஷல் (42), முகமது அல்டாப் (45), ரஷீப் (22), டைடா (24), அராபத் (22), சையோன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.