கோவை,
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கி மழை பெய்ய இரவில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக கோவை ரெயில் நிலையம் சாலை, ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதுதவிர துடியலூர், தடாகம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குட்டைகள், தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்ட விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.