
கோவை,
த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கோவை யில் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கோவை வந்தார். இன்றும் (ஞாயிற்றுக் கிழமை) த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய், கோவை- அவினாசி ரோடு லீமெரிடியன் ஓட்டலில் தங்கி உள்ளார். அந்த ஓட்டல் அருகில் கோகுலம் பார்க் என்ற மற்றொரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், அந்த ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப் பட்டு இருந்தது.
அதை பார்த்து ஓட்டல் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் கோவை மாவட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அந்த ஓட்டலில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை. யாரோ இ-மெயில் மூலம் புரளியை கிளப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விஜய் தங்கி உள்ள லீமெரிடியன் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.விஜய் தங்கிய ஓட்டலின் அருகே உள்ள மற்றொரு ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.