கோவையில் ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா?

2 months ago 18

*போலீஸ் தீவிர விசாரணை

கோவை : கோவையில் புதிய யுக்தியை கையாண்டு ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளுக்கும் வடமாநில கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை நகரில் பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது நூதன முறையில் திருட்டு சம்பவம் அரங்கேறும் நிகழ்வு நடைபெறுகிறது. ஏடிஎம் சென்டரில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் எடுக்க தெரியாதவர்களை குறிவைத்து உதவி செய்வது போல் நடித்து பணம் எடுத்து மோசடி செய்யும் சம்பவம் நடைபெற்று வந்தது.

ஆனால், தற்போது மோசடி நபர்கள் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் பணம் வரும் பகுதியை பேஸ்ட் போட்டு ஒட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதையறியாத வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க பின் நம்பரை பதிவு செய்தவுடன் பணம் எண்ணுவது போல சத்தம் மட்டுமே வரும். ஆனால், பணம் வெளியே வராது. வழக்கமாக பணம் வரவில்லையென்றால் சிறிது நேரத்தில் அந்த பணம் நமது வங்கி கணக்கில் வந்து விடும் என்பதால், அதனை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இதேபோல், கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி, ஆவாரம்பாளையம், சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இது போல், பல புகார் வர துவங்கின. இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட வங்கி ஏடிஎம் மையத்திறகு சென்று பார்த்த போது, இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் சிறிய டேப்பால் ஸ்டிக்கர் போன்று ஒட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை வெளியே இருந்து பார்க்கும் போது வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடினர். இதில், ரத்தனபுரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் ஏடிஎம் மையத்திற்கு சென்று ஸ்டிக்கர் ஒட்டுவதும், பின்னர் அங்கிருந்து வெளியே வந்து காத்திருந்து வாடிக்கையாளர்கள் சென்றபின் பணம் எடுத்து செல்வதும் தெரிய வந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அந்த இரண்டு வாலிபர்களும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சமீபத்தில் சென்னையில் இது போல் அவர்கள் கைவரிசை காட்டி போலீசில் சிக்கி வெளியே வந்ததும் தெரிய வந்தது. இந்த கும்பலுக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் நூதன முறையில் கைவரிசை காட்டும் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கோவையில் ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா? appeared first on Dinakaran.

Read Entire Article