வர்ஜீனியா: அமெரிக்க அதிபராக நாளை டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அவர் தனது மனைவி, மகளுடன் நேற்று மாலை வாஷிங்டன் வந்து சேர்ந்தார். சுமார் 2.5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் (78) நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சார்பில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். வாஷிங்டனில் நடக்கும் பதவியேற்பு விழா முடிந்த உடன், தனது அதிகாரபூர்வ அதிபர் பணியை டிரம்ப் தொடங்குவார். முதல் நாளான நாளை முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திடவுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. மிக முக்கியமாக டிரம்ப் பதவியேற்றவுடன் ஏற்கனவே ஜோ பிடன் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் கோப்புகளை ரத்து செய்யும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார். அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவியேற்பு விழா மூடிய திடலுக்குள் நடத்தப்படவுள்ளது. டிரம்ப்பின் பதவியேற்பு விழாவை மைதானத்திற்குள் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பல்லாயிரக் கணக்கான மைல்கள் தாண்டி வந்து, டிரம்ப்பை திரையில் காண்பதற்காக அல்ல என்று பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். பாரக் ஒபாமா 2009ல் அதிபராகப் பதவியேற்றபோது, திரண்ட கூட்டத்தைவிட, 2017ல் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் கூட்டம் குறைவாக இருந்ததால், டிரம்ப் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இருப்பினும், தற்போது நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவைக் காண மைதானத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சுமார் 2.5 லட்சம் பேர் வரையில் வருகை தரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை புளோரிடாவில் இருந்து வாஷிங்டன் வந்த டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் உடன் வந்தனர். வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்த டிரம்ப், வர்ஜீனியாவின் ஸ்டெர்லிங்கில் உள்ள தனது கோல்ஃப் கிளப்புக்குச் சென்றார். நாளை கேபிடல் ரோட்டுண்டாவில் அதிபராக பதவியேற்கும் டிரம்ப், தனது ெதாடக்க உரையை ஆற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமலுக்கு வந்தது ‘டிக் டாக்’ தடை
சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கிய ‘டிக் டாக்’ செயலியானது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இதுகுறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என்று கூறி இருந்தது. இந்நிலையில் சட்ட விதிகளின்படி அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை உறுதிபடுத்தப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பைபிள் மீது உறுதிமொழி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் பயன்படுத்த உள்ள பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பதவியேற்பு விழாவில் டிரம்ப், மறைந்த தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதும், ஆப்ரகாம் லிங்கனின் பைபிளை கொண்டு டிரம்ப் பதவியேற்றிருந்தார். முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கடந்த 2009 மற்றும் 2013 ஆகிய இருமுறை அதிபராக பொறுப்பேற்றபோதும் ஆப்ரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 2.5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு; அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்பு; மனைவி, மகளுடன் வாஷிங்டன் வந்தார் appeared first on Dinakaran.