
கோவை,
கோவை பீளமேடு பகுதியில் பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணியளவில் கோவை வந்தடைந்தார். அவரை தமிழ் எழுத்துகள் மற்றும் பாரதியார் முகம் அச்சிடப்பட்ட சால்வையை அணிவித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.
நாளை(புதன்கிழமை) காலையில் பா.ஜ.க. கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டம் முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு, மாலை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை 4 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்கிறார்.
அங்கு அவருக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்பு அளிக்கிறார். இதையடுத்து அவர் அங்குள்ள தியான லிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று லிங்க பைரவியை வழிபடுகிறார். சிவராத்திரி விழா நடைபெறும் ஆதியோகி சிலை இருக்கும் இடத்துக்கு கார் மூலம் செல்கிறார்.
அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் அமித்ஷா ஈஷா மையத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள்(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்துக்கு சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மத்திய மந்திரி அமித்ஷா, கோவை வருகையையொட்டி தமிழக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக கோவை மாநகர பகுதியில் 3 ஆயிரம் போலீசார், புறநகர் பகுதியில் 4 ஆயிரம் போலீசார் என்று மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் இருந்து ஈஷா யோகா மையம் செல்லும் வழியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர மத்திய மந்திரி அமித்ஷா, தங்கும் நட்சத்திர விடுதி, கட்சி அலுவலகம் மற்றும் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வந்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர மொபைல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் இருந்து மத்திய மந்திரி தங்கும் ஓட்டலுக்கு செல்லும் பாதை, பா.ஜ.க. புதிய அலுவலக கட்டிடம், ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் பாதை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.