கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று பிரசார பயணம் துவக்கினார். இரவில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அவர் அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களை சந்தித்து பேச முயன்றார். ஆனால், அவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. இதனை பார்த்த அதிமுக நிர்வாகிகள், ‘‘எடப்பாடி பழனிச்சாமி வந்து இருக்கிறார். அவரிடம் பேசுங்கள்’’ என அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களை கூவி கூவி அழைத்தனர். அப்போதும் யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியை சுற்றி கேமராக்களும், அதிமுகவினரும் சூழ்ந்து இருந்தனர். அவர்களை மீறி அவரிடம் யாரும் செல்ல முடியவில்லை.
நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பலர் ஏதோ பட ஷூட்டிங் நடக்கிறது என தங்களுக்குள் பேசிக்கொண்டு சென்றனர். எடப்பாடி பழனிசாமியை அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும், ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் வரை மட்டுமே அவர் நடைபயிற்சி செய்தார். டீக்கடைக்கு சென்று அங்கு மக்களை பார்க்கலாம் என நினைத்தபோது, அங்கேயும் யாரும் இல்லை. டீ மட்டும் குடித்துவிட்டு திரும்பினார். யாரும் கிடைக்காததால், அப்பகுதியில் எலுமிச்சை பழம் விற்றுக்கொண்டிருந்த வியாபாரி ஒருவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு எலுமிச்சை பழங்களை வாங்கிவிட்டு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினார்.
The post கோவை ரேஸ்கோர்ஸில் இன்று காலை நடைபயிற்சி; ‘யாராச்சும் வந்து பேசுங்க… எடப்பாடி வந்து இருக்காரு…’ கூவி அழைத்த அதிமுக நிர்வாகிகள் appeared first on Dinakaran.