சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமை 17 மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று (05.10.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.