
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நேரில் சென்றார். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஏப்ரல் 25-ந்தேதி ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.