*பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
பெ.நா.பாளையம் : கோவை துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி வியாபாரி உயிரிழந்தார். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை தாளியூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (69). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நாள்தோறும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தடாகம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென எதிரே வந்த ஒரு காட்டு யானை நடராஜை தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வனப்பகுதியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் காட்டு யானை தாக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரை தாக்கிய காட்டு யானைகளைப் பிடித்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த டி.ஆர்.ஓ. கோவிந்தன், தடாகம் காவல் துறையினர் மற்றும் கோவை வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து நடராஜ் உடலை வனத்துறையினர் ஆம்புலன்ஸில் எடுத்துச்செல்ல முற்பட்டபோது, உடலை எடுத்து செல்ல விடாமல் மீண்டும் சாலை மறியலில் விவசாயிகளும், பொதுமக்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து மனிதர்களை தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்கு உத்தரவாதம் தர வேண்டும் எனவும், இந்த யானையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வாதிட்டனர்.
இது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், கும்கி யானைகளை அப்பகுதிக்கு வரவழைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் கும்கி யானைகளை அழைத்து வர முடிவு செய்யப்பட்டு இருப்பதற்கான, உத்தரவாத நகலை வனத்துறையினர் காட்டிய பிறகே பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல உறவினர்களும், பொதுமக்களும் சம்பந்தம் தெரிவித்தனர்.
பின்னர் நடராஜ் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிரோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த தொடர் மறியல் போராட்டத்தினால் காலை சுமார் 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
யானை தாக்குதல் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. உணவு தேடி யானைகள் வீடுகளை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் காட்டு யானை தாக்கி ஒரே மாதத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகரிக்கும் மனித-யானை மோதல்
கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதிகளில் ஜனவரி மாதத்தில் மட்டும் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
2 கும்கிகளை வரவழைக்க திட்டம்
கோவை வனச்சரகத்தில் தடாகம், வரப்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க 2 கும்கி யானைகளை வரவழைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைத்து, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க 2 கூடுதல் குழு மாவட்ட வன அலுவலர் தகவல்
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கி நடராஜ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து கோவை வனச்சரகத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனவர் தலைமையில் மற்ற வனச்சரக பணியாளர்கள் மற்றும் யானை விரட்டும் காவலர்களை கொண்ட 2 கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகள் காட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கூடுதலாக இரண்டு வாகனங்கள் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானைகளை விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோவை துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி வியாபாரி உயிரிழப்பு appeared first on Dinakaran.