கோவை குண்டு வெடிப்பு வழக்கில்; கைதான டெய்லர் ராஜாவை காவலில் எடுக்க திட்டம்!

5 hours ago 2

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கைதான டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் 188 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையை சேர்ந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேர் தலைமறைவாக இருந்தனர்.

கடந்த 28 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். நேற்று அவரை 5வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜூலை 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டெய்லர் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோவையில் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, டெய்லர் ராஜா கோவையிலிருந்து தப்பிச்சென்றார். அப்போது அவருக்கு வயது 20. முதலில் அவர் கர்நாடகாவின் ஹூப்பள்ளி என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கு அவர் தினசரி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பின்னர் குடும்பத்தினருடன் விஜயபுராவுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு தனது பெயரை ஷாஜகான் என்று மாற்றியுள்ளார். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். காய்கறி, மிளகாய் விற்பனை ஏஜென்டாக வேலை பார்த்துள்ளார். கர்நாடகாவில் அவர் இருந்தாலும் கோவையில் உள்ள நண்பர்களை அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதை ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். அப்போதுதான் விஜயபுராவில் டெய்லர் ராஜா தலைமறைவாக இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதை உறுதி செய்த போலீசார் அங்கு சென்று காய்கறி சந்தையில் டெய்லர் ராஜாவை கைது செய்துள்ளனர்.

 

The post கோவை குண்டு வெடிப்பு வழக்கில்; கைதான டெய்லர் ராஜாவை காவலில் எடுக்க திட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article