கோவை: கோவை – அன்னூர் அடுத்துள்ள பொகளூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஊட்டி செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்தார். பின்னர், அங்கிருந்து தனது காரில் ஊட்டி நோக்கி சென்றார்.
அப்போது, திடீரென கோவை – அன்னூர் அடுத்துள்ள பொகளூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, மருந்து கிடங்கு, டிஸ்பென்சரி, மருந்து வைப்பறை, நோயாளிகள் காத்திருப்பு அறை, மருத்துவர்கள் அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மருந்து, மாத்திரைகள் முறையாக வருகிறதா?மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்தும், அதுகுறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் ரிஜிஸ்டர் உள்ளிட்டவற்றையும் வாங்கி ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மாதந்தோறும் மருந்துகளை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் அவர் அங்கிருந்த கோவை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பாலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தராஜ், மருத்துவர் இலக்கியா உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பயனாளிகள் குறித்த ரிஜிஸ்டரில் பயனாளிகளின் பட்டியலை பெற்று அதிலிருந்த ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியம் நெஞ்சு வலிக்கான மருந்து மாத்திரைகள் பெற்றீர்களா? தற்போது எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள்? இங்கு சிகிச்சை முறையாக அளித்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் அடுக்கடுக்காக கேட்டறிந்தார். ஆய்வின் போது சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
The post கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு! appeared first on Dinakaran.