குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். குன்றத்தூர் அடுத்த கோவூரில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரராகவும், அம்பாள் சவுந்தராம்பிகையாவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கிபி 7ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில், சென்னையிலுள்ள நவகிரக கோயில்களில் சிறந்த ‘புதன்’ பரிகார தலம் ஆகும்.
கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரால் ‘கோவூர் பச்சரட்னம்’ என்று அழைக்கப்பட்ட 5 பாடல்களையும் பாடல்பெற்ற தலமாகும். இந்த, சுந்தரேஸ்வரர் கோயிலில் காமாட்சியம்மன், சிவபெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவில் வரலாறு: ஒருமுறை சிவபெருமான் சுந்தரேஸ்வரராக இக்கோயில் உள்ள இடத்தில் தவத்தில் இருந்தார். அவர், கண்ணை மூடி தவமிருந்ததால் கோவூரை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் சூடானதாக மாறியது.
எல்லா ஜீவராசிகளும் இந்த வெப்பத்தினால் பாதிக்கத் தொடங்கின. ஆனால், சிவன் தனது கண்களை மூடி ஆழ்ந்த தியானம் இருந்ததால் அவர் இதை உணரவில்லை. ஆகையால், என்ன செய்வது என்று அறியாத முனிவர்கள் மற்றும் தேவர்கள் இதுகுறித்து விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு உலகத்தை காப்பாற்ற, மகாலட்சுமியை பூலோகத்திற்கு அனுப்பி, சிவனின் தவத்தை கலைத்து, பூமியை காக்குமாறு கூறினார். அவர் கோ வேடம் பூண்டார்.
கோ என்றால் பசு என்ற ஒரு பெயர் உண்டு. சிவ ஆராதனை நடத்திய இடம் என்பதால் கோவூர் என்ற பெயர் பெற்றது. இவ்வளவு, சிறப்பு மிக்க இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆகம விதிப்படி, ‘திருக்குட முழுக்கு’ எனப்படும். கும்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக கோபுரங்கள் மற்றும் சாமி சிலைகள் ஆகியவை புனரமைக்கும் பணிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
அந்த, பணிகள் யாவும் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கொண்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் வடக்கு பகுதி ஒன்றிய திமுக செயலாளர் வந்தேமாதரம், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மணி மற்றும் கோவூர், குன்றத்தூர், பூந்தமல்லி,
போரூர், பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முடிவில் கும்பாபிஷேக நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவூர் ஊராட்சி மன்றம் சார்பில், அதன் தலைவர் பா.சுதாகர் ஆகியோர் மேற்கொண்டனர். விழாவின்போது மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கோவூர் சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்: அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.