கோவில்பட்டியில் மாயமான 5ம் வகுப்பு சிறுவன் நகைக்காக கொலை?

1 month ago 5

*5 பேரை பிடித்து தனிப்படை விசாரணை

கோவில்பட்டி : கோவில்பட்டியில் வீட்டில் இருந்து மாயமான 5ம் வகுப்பு சிறுவன், பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கிடந்தான். நகைக்காக கொலை செய்யப்பட்டானா? என்ற கோணத்தில் 5 பேரை பிடித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர், தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மணிகண்டன், கருப்பசாமி என 2 மகன்கள் உள்ளனர்.

மணிகண்டன் இங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். மணிகண்டன் பள்ளிக்கு சென்றுவிட்டான். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கழுத்தில் ஒன்றரை பவுன் செயின், கையில் 1 கிராம் மோதிரம் அணிந்திருந்தான்.

இந்நிலையில் மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய் பாலசுந்தரி, மகனை காணாது அதிர்ச்சியடைந்தார். டிவி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. இதையடுத்து கணவருக்கு பாலசுந்தரி தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்ததும் உறவினர்களுடன் சேர்ந்து தம்பதியினர் பல இடங்களில் சிறுவனை தேடினர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசில் கார்த்திக் முருகன் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து இப்பகுதியில் வீடு, வீடாக சோதனை நடத்தினர்.

மேலும் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். சிறுவனை கண்டுபிடிக்க கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் உத்தரவின் பேரில் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்ஐக்கள் செந்தில்குமார், வேல்பாண்டி மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் சிறுவனை தீவிரமாக தேடி வந்த நிலையில், பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் கருப்பசாமி மூச்சு பேச்சின்றி கிடந்தது தெரிய வந்தது.

இதையறிந்த பெற்றோர் அவனை தூக்கிக்கொண்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்து பல மணி நேரம் இருக்கும் என்று தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடலை தனிப்படை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுவன் கழுத்தில், கையில் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. நகைக்காக அன்பாக பேசி அவனை அழைத்துச் சென்று மர்ம நபர்கள் கொன்றார்களா? அவன் எப்படி இறந்தான்? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக இதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கோவில்பட்டியில் மாயமான 5ம் வகுப்பு சிறுவன் நகைக்காக கொலை? appeared first on Dinakaran.

Read Entire Article