*இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது அம்பலம்
எட்டயபுரம் : கோவில்பட்டியில் 28 டன் யூரியா பதுக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்த உர மூட்டைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவில்பட்டி திட்டங்குளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடோனில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்பி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குடோனில் பதுக்கப்பட்டிருந்த தலா 45 கிலோ எடை கொண்ட 600 யூரியா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 28,350 கிலோ ஆகும்.
இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி பழனிசெல்வம், (58), ராஜ்குமார் (35), ஜோதிநகரை சேர்ந்த கணேசன் (52), குடோன் உரிமையாளர் ஜோதி நகரை சேர்ந்த வள்ளுவன் (53) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரும், கணேசனும் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி பாரதிய ஜன் உர்வரக் பரியோஜனா திட்டத்தில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட யூரியா உர மூட்டைகளில் 630 மூட்டைகளை கோவில்பட்டி சிப்காட் தொழிற்பேட்டை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு இந்த உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். இந்த உர மூட்டைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பசுவந்தனை, நாகம்பட்டி, பாண்டவர்மங்கலம், அய்யநேரி, சிந்தலக்கரை உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து உர மூட்டைகளை எடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
இங்கு மூட்டை ரூ.266 அங்கு 3 ஆயிரம் ரூபாய்
ஒன்றிய அரசு மானிய விலையில் 46 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டையை ரூ.266க்கு வழங்குகிறது. பல்வேறு விதிகளை கடைப்பிடித்தே உர மூட்டைகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும். அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த யூரியா உர மூட்டைகளை பதுக்கி வைத்து சில தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல் இலங்கையில் நிலவும் உரத்தட்டுப்பாடு காரணமாக அங்கு மூட்டை ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விலை போகிறது. இதனால் பீடி இலை, மஞ்சளை போன்று யூரியா மூட்டைகளும் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post கோவில்பட்டியில் 28 டன் யூரியா பதுக்கிய வழக்கில் இருவர் கைது appeared first on Dinakaran.