
கொடிமரம் என்பது இந்து கோவில்களில் பலி பீடத்துக்கு அருகே கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். பல ஆலயங்களில் கொடிமரம் உள்ளது. சமஸ்கிருதத்தில் 'துவஜஸ்தம்பம்' என்று அழைக்கப்படும் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.
பொதுவாக ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகின்றன. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகுதியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டபமாகவும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்பிள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை ராஜ கோபுரமாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில் திருவிழா நடைபெறும்போது முதல் நாள் கொடியேற்றமானது நடைபெறும். தேவர்கள், இந்த கொடிமரத்தின் வழியாகத்தான் கோவிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.
கொடி மரத்தின் அமைப்பு
பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய ஐந்து வகையான மரங்களை பயன்படுத்தி கொடிமரம் தயாரிக்கப்படுகிறது. மனிதனின் முதுகு தண்டைப் போன்றது கோவிலின் கொடிமரம். நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போல கொடிமரமும் 32 வளையங்களுடன் அமைக்கப்படுகிறது. கோவில் சன்னிதிக்கும், கோபுரத்துக்கும் இடையே கொடிமரம் அமைந்திருக்கும். அதிகபட்சமாக 13 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்படும். கொடிமரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே நேரம் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்தில் இருக்கும்.
கொடிமரம் மூன்று பாகங்களை கொண்டது. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் அம்சம் பொருந்தியது. சதுரமான அடிப்பாகம் பிரம்மனையும், எண்கோணப்பகுதியான இடைப்பாகம் விஷ்ணுவையும், உருண்ட நீண்ட மேல்பாகம் சிவனையும் குறிக்கிறது. எனவே கொடிமரத்தை வணங்குவது சிறப்பான ஒன்றாகும்.
கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பர். கொடிமரத்தின் மேலே உலோகத் தகடுகள் அமைக்கப்பட்டிருக்கும். சில கோவில்களில் கொடிமரத்தை இடி, மின்னலை தாங்கும் இடிதாங்கியாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சிறப்புகள்
கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம். ஏனென்றால் கோவிலில் இறைவனை வணங்குவதும், கொடி மரத்தின் கீழே விழுந்து வணங்குவதும் இணையாக கருதப்படுகிறது. இறைவனின் அருளைப்பெற, நம்மை தகுதிப்படுத்த கொடிமர வணக்கம் அவசியமாகும்.
நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமானால், நமது மனம் ஒருநிலையுடன் நிறுத்தப்பட வேண்டும். இதை உணர்த்தவே கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள்.
அசுர சக்திகளை அழிக்கவும், சிவகணங்களை கோவிலுக்குள் வரவைக்கவும், ஆலயத்தையும் பக்தர்களையும் காக்கவும் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
அடையாள சின்னம்
கொடி மரத்தின் உச்சியில் அந்தந்த கோவில் இறைவனின் வாகனம் அடையாள சின்னமாக அமைக்கப்படும். அதன்படி, விநாயகர் கோவிலில் மூசிகம், சிவன் கோவிலில் நந்தி, விஷ்ணு கோவிலில் கருடன், குபேரன் கோவிலில் நரன், முருகன் கோவிலில் மயில் அல்லது சேவல், சாஸ்தா கோவிலில் குதிரை, வருணன் கோவிலில் அன்னம், எமன் கோவிலில் எருமை, சனிபகவான் கோவிலில் காகம், இந்திரன் கோவிலில் யானை, துர்க்கை மற்றும் அம்மன் கோவில்களில் சிம்மம் என உருவங்கள் பொறித்த கொடி ஏற்றப்படும். இவ்வாறு ஏற்றப்படும் கொடியானது திருவிழா இறுதி நாளில் இறக்கப்படும்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய கொடிமரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் முதலான அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதி. அந்த அளவுக்கு கொடிமரம் மூலவருக்கு நிகராக கருதப்படுகிறது. கொடிமரத்துக்கு அருகில் நின்று நாம் வேண்டும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் சென்றடையும் என்பது நம்பிக்கை.