கோவிந்தா…கோபாலா… கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

20 hours ago 2


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கோவிந்தா… கோபாலா என கோஷம் முழங்க திருக்கல்யாண உற்சவக் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருக்கல்யாணம் வரும் ஏப்.11ல் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி பட்டம் மேளதாளம் முழங்க மாடவீதிகள், ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. காலை 11.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து கொடி மரத்திற்கும், கொடிப்பட்டத்திற்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும், கொடிமரம் மற்றும் அந்த பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது சர்வ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனர். இன்று முதல் தினசரி பல்வேறு மண்டபங்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா நிகழ்ச்சிகளும் தினசரி நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

The post கோவிந்தா…கோபாலா… கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article