கோவிட் உபகரணங்கள் கொள்முதல்; எடியூரப்பா ஆட்சியில் ரூ45 கோடி முறைகேடு: நீதிபதி குன்ஹா ஆணையம் அறிக்கை

1 month ago 3

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியின் ேபாது கோவிட் பிபிஇகிட் கொள்முதல் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.45 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா விசாரணை ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோது, கொரோனா தொற்று பரவல் இருந்தது. தொற்று பரவலை தடுக்க மாநில சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பயன்படுத்த பிபிஇ கிட் மற்றும் நோயால் பாதிக்கப்படுவோரை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்த பிபிஇ கிட் கொள்முதல் செய்தது உள்பட கோவிட் காலத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் பிற மருத்துவ செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி முதல் கட்டமாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. இதில் கோவிட் காலத்தில் கொரோனா கண்டுபிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.பிசிஆர் கிட்கள் அரசு நிர்ணயித்த விலையைவிட இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

அதிலும் 16 லட்சம் கிட்கள் காலாவதியானவை. இதில் ரூ.45 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் மருத்துவ கல்வி துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், சப்ளையர்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பதுடன், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் குழு பரிந்துரை செய்துள்ளது. அப்போது முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அப்போது சுகாதார துறை அமைச்சராக இருந்த பி.ஸ்ரீராமுலு ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரவும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

The post கோவிட் உபகரணங்கள் கொள்முதல்; எடியூரப்பா ஆட்சியில் ரூ45 கோடி முறைகேடு: நீதிபதி குன்ஹா ஆணையம் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article