
மும்பை,
ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா சதம் (103 ரன்கள்) விளாசினார். சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரியன்ஷ் ஆர்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அதை நினைத்து கவலைப்படாத பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக சதம் விளாசி அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். இதனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சச்சினுக்கு பிறகு அரிய திறமை கொண்ட 2-வது பேட்ஸ்மேன் பிரியன்ஷ் ஆர்யா என்று இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிரியன்ஷ் ஆர்யா இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடுவார். சச்சினுக்கு பிறகு, அவர் ஒரு அதிசய திறமை கொண்ட வீரர். ஏனெனில் இன்று அவர் கடினமான சூழ்நிலையில் சதம் அடித்தார். அவர் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களைப் பாருங்கள். அவர் 250-ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் அடித்தார். ஸ்ரேயாஸ், நேஹல் மற்றும் பிரப்சிம்ரன் விரைவில் ஆட்டமிழந்தபோதும் அவர் அதிரடியாக ரன்கள் எடுத்தார்.
பாயிண்ட் மற்றும் கவர் திசைகளில் அவர் சிக்சர்கள் அடிக்கும் விதம் சிறப்பானது. பதிரனா, ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் ஆகியோர் அவருக்கு முன்னால் இருந்த பந்து வீச்சாளர்கள். அவர் பஞ்சாபிற்காக ஒரு தோல்வியடைந்த போட்டியை வென்று கொடுத்துள்ளார்" என்று கூறினார்.