ஜெய்ப்பூர்,
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
இவருக்கும் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களது திருமணம் ஏற்கனவே அறிவித்த படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சமீபத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர்களின் திருமணத்தின் முதல் புகைப்படத்தை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில்," நேற்று மாலை உதய்பூரில் பேட்மிண்டன் சாம்பியன் பிவி சிந்து - வெங்கட தத்தா சாய் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தேன்." என்று பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.