மதுரை: வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகர் இன்று மீண்டும் மலைக்கு திரும்புகிறார். இன்று அதிகாலை மன்னர் சேதுபதி மண்டபத்தில் விடிய, விடிய கள்ளழகரின் பூப்பல்லக்கு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. அதற்கு மறுநாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அழகர் வண்டியூரில் இருந்து புறப்பட்டு, வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கருட வாகனத்தில் தோன்றி மண்டூக (தவளை) உருவில் இருந்த சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதன்பின் நேற்று முன்தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.
இதில், முத்தங்கி சேவையில் தொடங்கி மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அவதாரங்களில் விடிய, விடிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 6 மணியளவில் மோகினி அவதாரத்தில் மண்டபத்தை சுற்றி வலம் வந்தார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் புறப்பட்ட அழகர், மூங்கில் கடைவீதி, கோரிப்பாளையம் வழியாக பவனி வந்து இரவு 11 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார். இதுவரை அழகராக காட்சியளித்தவர், இன்று அதிகாலை 2.30 மணியளவில் கள்ளழகர் வேடத்திற்கு மாறி பூப்பல்லக்கில் விடிய, விடிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கள்ளழகர் திருக்கோலத்துடன் அருகில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆகி, அங்கிருந்து அழகர்கோவில் மலைக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு செல்லும் வழியில் உள்ள அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல ஊர்களில் திருவிழா, விளையாட்டுகள் நடைபெற உள்ளன. நாளை காலை 10 மணி அளவில் அழகர்கோவில் இருப்பிடம் சென்று சேர்கிறார். நாளை மறுநாள் (மே 17) உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
The post கோலாகலமாக நடந்த சித்திரை திருவிழா; மதுரையில் இருந்து இன்று மலைக்கு செல்லும் அழகர்: விடிய, விடிய பூப்பல்லக்கு தரிசனம் appeared first on Dinakaran.