நடிகர் நானியின் வால் போஸ்டர் சினிமாஸ் தயாரிப்பில் வெளியாகி யிருக்கும் படம் ஓடிடியில் பார்க்கலாம். ராம் ஜெகதீஷ் எழுத்து இயக்கத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். ஒரு பொய் வழக்கை மையமாகக்கொண்டு வெளியாகியிருக்கும் நீதிமன்ற திரைப்படம். பணபலமும் அதிகாரமும் சட்டத்தை தனக்குத் தகுந்தாற்போல வளைத்துக்கொள்ளும். சட்டத்தின் ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். அதில் POCSO சட்டமும் விதிவிலக்கல்ல. POCSO சட்டம் 2012ஆம் ஆண்டு அமல்படுத்தப்படுகிறது, இந்தப் படத்தின் கதை 2013ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கின்றது. இருவருக்கும் இடையேயான காதலை, பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் போக்சோ சட்டத்தைப் பயன்படுத்தி 19 வயது காதலன் மீது வழக்குப் பதியப்படுகிறது. அதிலிருந்து அவன் எப்படி வெளியேறுகிறான் என்பது கதை.மிகச் சிறப்பான கோர்ட் ரூம் டிராமாவா என்றால் நிச்சயமாக இல்லை. அதைத் தாண்டி இப்படம் பேசுகின்ற மிக முக்கியமான விஷயம், குடும்ப கவுரவம் என்று சொல்லி காதலர்கள் மீது போக்சோ பொய்வழக்குகள் போடப் படுகின்றன. பெண்குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒரு மனவிலக்கத்தோடே இருக்கிறார்கள். பதின் பருவத்தினரின் நியாயங்களை அவர்களின் உலகைப் புரிந்துகொள்ள முயற்சிக்காத பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் சமூகப் பிழை, அதைச் சுட்டிக்காட்டிய விதத்தில் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
தனக்கு ஒருவனை/ஒருத்தியைப் பிடித்திருக்கிறது என்று பிள்ளைகள் வந்து சொல்லக்கூடிய சுதந்திரம் எத்தனை வீடுகளில் இருக்கிறது?இறுதியாக மாணவர்களுக்கு சட்டத்தையும் சேர்த்துச் சொல்லித்தர வேண்டும் என்கிறார்கள். காவல்துறை வக்கீல் எல்லோரும் அறத்தில் இருந்து பிறழ்ந்து நடந்துவிட்டு பிள்ளைகளுக்கு சட்டம் சொல்லித்தந்து மட்டும் என்வாகப் போகிறது!? இல்லை சட்டம் தேவையில்லை, இங்கு தேவையெல்லாம் செக்ஸ் எஜுகேசன்தான். அது இல்லாததால் தான் பதினாறு வயதில் கருத்தரித்த மாணவி, பள்ளிக் கழிவறையில் பிள்ளையைப் பெற்றெடுத்த மாணவி என்றெல்லாம் செய்தியைக் காண நேர்கிறது. அதையெல்லாம் சாதாரணமாக வாசித்துக் கடந்துபோகிற சமூகம் செக்ஸ் எஜுகேசன் என்றால் மட்டும் பதற்றம் கொள்கிறது. படம் பார்க்கும்போது சிலருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கும், போக்சோ சட்டம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள ஆண்பெண் இருவரையும் பாதுகாப்பதற்காக உண்டாக்கப்பட்டது. ஒருவேளை உறவு வைத்துக்கொண்ட இருவருமே பதினெட்டு வயதுக்கு கீழாக இருந்தால் என்ன ஆகும்?
மூன்று செய்திகள் இதோ
* இருவருக்குமே 18 வயதுக்கு கீழ் இருப்பின் மைனர்களிடையேயான காதலை பாலியல் பலாத்காரம் என போக்ஸோவில் தண்டிக்க முடியாது: மேகாலயா ஹைகோர்ட்.
*பதின்பருவத்தினரின் காதல் உறவைத் தடுப்பதற்காக போக்சோ சட்டம் பிறப்பிக்கப்படவில்லை’ என்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*புதுடில்லி : பாலியல் அத்துமீறலில் இருந்து குழந்தைகளை காப்பதே, ‘போக்சோ’ சட்டத்தின் நோக்கம். மற்றபடி, இளம் வயதினருக்கு இடையிலான ஒருமித்த காதல் உறவுகளை அது ஒருபோதும் குற்றமாக கருதவில்லை’ என, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* இன்னொரு முக்கியமான விசயம் உங்கள் வீடுகளில் பதினான்கு வயதை எட்டிய குழந்தைகள் இருந்தால், ஆணோ பெண்ணோ. அவர்கள் குழந்தைகள் அல்ல, இன்றைய ஆண்ட்ராய்டு பாய்ச்சல் அவர்களுக்கு 20 வயதினரின் அறிவைக் கொடுத்துள்ளது. ‘என் புள்ளைக்கு ஒன்றுமே தெரியாது ‘என்று அப்பாவித்தனத்தை அவர்கள்மேல் ஏற்றுவதைக் காட்டிலும், உடன் அமர்ந்து பேசுங்கள். அவர்களை இந்தச் சுற்றுச்சூழல் என்னவாக மாற்றி வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சகல இச்சைகளும் அறிமுகம் ஆகின்ற வயதிது. இப்படிதான் இருக்கும், இதுதான் இயல்பு, இந்த இயல்பைக் கண்டு அஞ்சாதே, இந்த கிளர்ச்சியைக் கண்டு அதிக ஆர்வமும் கொள்ளாதே என அவர்களை நெறிப்படுத்த வேண்டிய இடத்தில பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆஹா நம் எண்ண ஓட்டங்களைப் பற்றி பெற்றோருக்கு எல்லாம் தெரிகிறதே எனும்போதுதான் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என கண்டித்துக்கொண்டிருப்பதால் ஒரு பலனும் இல்லை.
எதாவது தவறு செய்தாயா? எனக் கேட்பதற்கு முன் அப்படியொரு சூழல் வரின் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுத்து இருக்கிறோமா? பிள்ளைகளுக்கு எந்த வயதில் எதைச் செய்யவேண்டும் என்கிற ஆழமான புரிதல் இருக்கின்றது என்பதுதான் பெற்றோரை காரணமற்ற அச்சங்களில் இருந்து விடுவிக்கும். அந்தப் புரிதலை விதைக்கிறோமா? அதுதான் கேள்வி. சட்டத்தின் செயல்பாடுகள் என்ன, என்ன செய்தால் எப்படிப்பட்ட தண்டனை உண்டு, ஒருவேளை உன் பக்கம் நியாயம் எனில் அதை எப்படி எடுத்துச் சொல்ல வேண்டும் உள்ளிட்ட அனைத்தும் வகுப்பெடுக்க வேண்டிய சூழல் உருவாகியிருப்பதை இப்படம் சுட்டிக் காட்டியிருக்கிறது. சுமார் 58% பொய் பாலியல் வழக்குகள் நம் இந்திய நீதிமன்றங்களில் உள்ளன. அனைத்தும் ஆண்கள் அல்லது மைனர் ஆண்கள் மேல் பதியப்பட்ட வழக்குகள். இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் என் மகன்/மகள் ஒன்றும் அறியாக் குழந்தை எனச் சொல்வது பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்னும் பழமொழிக்கு ஒப்பாகிவிடும் என்பதையும் இப்படம் எடுத்து வைக்கிறது.
– கார்த்திக்
The post கோர்ட்: ஸ்டேட் vs ஏ நோபடி appeared first on Dinakaran.