சென்னை: கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.04.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான அடையாளமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள் வி.எஸ்.பி. இளங்கோவன், கே.எம். சுப்பிரமணியன், இணை ஆணையர்கள் எ.ஆர். பிரகாஷ், செ.மாரிமுத்து, பி. ரமேஷ் மற்றும் உதவி ஆணையர்/செயல் அலுவலர் இரா. முத்துராமலிங்கம் ஆகியோரிடம் தங்க முதலீட்டிற்கான பத்திரங்களை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு முனைப்பான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
21 திருக்கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தல்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 2021-2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாட்டை சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை என மூன்று மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் க.ரவிச்சந்திர பாபு, செல்வி ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி, இக்குழுவினரின் கண்காணிப்பில், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை சமஸ்தான கான தேவஸ்தானம், இராமநாதபுரம் அருள்மிகு ஆதிஜெகநாதபெருமாள் திருக்கோயில், இராமநாதபுரம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில், தாயமங்கலம் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில், சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், காருவள்ளி அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், சேலம், அருள்மிகு கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோயில், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 21 திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் சுத்தத் தங்கம் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் அந்தந்த திருக்கோயிலின் பெயரில் தங்கக் கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு திருக்கோயில்களுக்கு 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது.
21 திருக்கோயில்களின் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதற்கு அடையாளமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர் / செயல் அலுவலர் ஆகியோரிடம் அதற்கான பத்திரங்களை முதலமைச்சர் இன்று வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்களை உருக்கி திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதோடு, அதன்மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் க.ரவிச்சந்திர பாபு, செல்வி ஆர்.மாலா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஜோபி ஜோஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.