கோயில் முகப்பிலும், சந்நதி முகப்பிலும் கஜலட்சுமி உருவம் பதிக்கப்பட்டு இருப்பதேன்?

1 month ago 4


– யாழினி பர்வதம், சென்னை.

வாயிற்படியில் லட்சுமியின் வாசம் இருக்க வேண்டும் என்பதே அதற்கான தாத்பரியம் ஆகும். பொதுவாக நம் வீடுகளில் கூட தலைவாயிற்படியில் விளக்கேற்றி வைத்து வழிபடுவோம் அல்லவா, பெரும்பாலானோர் வீடுகளில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டிட்டு வணங்குவதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள். அதாவது வாயிற்படியில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கிறார்கள். இதனைத் தெளிவாக உணர்த்தும் விதமாக ஆலய வாயிலிலும், சந்நதியின் நுழைவு வாயிலிலும் கஜலட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி என்பது இருபுறமும் யானைகள் துதிக்கையால் வணங்க நடுவில் மகாலட்சுமி அமர்ந்திருக்கும் அம்சம் ஆகும். யானை என்பது ஞானத்தின் அடையாளம். ஞானத்துடன் கூடிய செல்வமே நிரந்தரமானது என்பதை உணர்த்துவதே கஜலட்சுமியின் தாத்பரியம். இதனை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் புரிந்துகொண்டு தனிப்பட்ட முறையில் தனக்குச் செல்வம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமல் உலக நன்மை கருதி ஆலயங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்காகத்தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு நலம் பெற வேண்டும், பசி, பஞ்சம், பட்டினி ஏதுமின்றி நாட்டு மக்கள் யாவரும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்றுதான் மக்களின் பிரார்த்தனை அமைய வேண்டும். அதுவே ஞானத்துடன் கூடிய செல்வம். அதனை வேண்டி இறைவனிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சந்நதியின் முகப்பினில் கஜலட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முகப்பில் கஜலட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டுள்ள ஆலயங்கள் மட்டுமல்ல, அந்த ஆலயத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளும் செல்வச் செழிப்பால் திளைத்திருப்பதைக் காண இயலும்.

?நம்மைவிட வயதில் இளையவர்களான புரோகிதர்களை சேவித்து வணங்கலாமா?

– கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி.
அவசியம் சேவித்து வணங்க வேண்டும். வீட்டு சாஸ்திரிகள் அல்லது புரோகிதர் என்பவர் குருவிற்கு சமம் ஆனவர். பிரம்மாவின் ஸ்வரூபம். மாதா, பிதாவிற்கு அடுத்த படியாக நாம் வணங்க வேண்டிய குருவும் அவரே. புரோகிதர் என்று அந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டால் அவருடைய வயது, உருவம் என்று எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை அவசியம் அளிக்க வேண்டும். வீட்டிற்கு வருகின்ற புரோகிதர் வயதில் இளையவராய் இருந்தாலும் கட்டாயம் அவரை சேவித்து வணங்க வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

?அமானுஷ்யம் என்றால் என்ன?

– அரிமளம் இரா. தளவாய், நாராயணசாமி.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அமானுஷ்யம் என்று அழைப்பார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை மட்டும் அமானுஷ்யம் என்று எண்ணக்கூடாது. இந்த உலகில் சாமானிய மனிதர்களாகிய நம் அறிவிற்கு எட்டாத பல விஷயங்கள் உண்டு. மனித சக்தியால் புரிந்துகொள்ள இயலாத விஷயங்கள் அனைத்தையும் அமானுஷ்யம் என்று சொல்லலாம். இவற்றில் ஒரு சில விஷயங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யக் கூடியவை ஆகவும், சில விஷயங்கள் மாற்றுப்பலன்களைத் தருவதாகவும் இருக்கும். நன்மை தரும் விஷயங்களை தெய்வீகமாகவும், தீய விஷயங்களை பேய், பிசாசு என்ற பெயரிலும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அமானுஷ்யம் என்ற வார்த்தைக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதே நேரடியான பொருள் ஆகும்.

?நம்மைப் படைத்துக் காத்தருளும் இறைவனை அவன், இவன் என்று நாம் அழைப்பது சரியா?

– மு. மதிவாணன், அரூர்.
சரியே. அது பக்தியின் வெளிப்பாடு. இறைவனின் பால் நம் மனம் லயித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நாம் வேறு, இறைவன் வேறு என்று பிரித்துப்பார்க்காமல் இறைவனையும் நம்மில் ஒருவனாய் நினைக்கிறோம். ஆதிசங்கரரின் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற அத்வைத சித்தாந்தத்தின்படி நமக்குள்ளேயே இறைவன் உய்கிறான் என்பதை உணர்ந்து சொல்லும் வார்த்தைகள். இறைவனிடம் கொண்டிருக்கும் அபரிமிதமான பக்தியும், நீ எனக்குச் சொந்தம் என்ற உரிமையும்தான் இறைவனை அவன், இவன் என்று நம்மைச் சொல்ல வைக்கிறது. நீ, வா, போ என்றழைப்பது உரிமையின் வெளிப்பாடு. நீங்கள், அவர், இவர் என்று அழைப்பது மரியாதையை கொடுத்தாலும் மனம் அவர்களோடு ஒன்றிணையாமல் தனித்துத்தான் செயல்படும். பெரும்பாலானோர் பெற்ற தாயை நீ, வா, போ என்று ஒருமையில் அழைப்பார்கள், தந்தையை வாங்க, போங்க என்பார்கள். இன்னும் சிலர் தந்தையிடம் கூட நீ, வா, போ என்று ஒருமையில்தான் பேசுவார்கள். அதற்காக அவர்கள் பெற்றோரிடம் அலட்சியம் காட்டுகிறார்கள் என்று எண்ண முடியாது. அதேபோல தனக்கு உரியவன் என்ற உரிமையிலும், இறைவனிடம் கொண்டிருக்கும் அன்யோன்யத்தின் வெளிப்பாடாகவும் இறைவனை அவன், இவன் என்று அழைக்கிறார்கள். அவ்வாறு அழைப்பது முற்றிலும் சரியே. இதில் குறை காண இயலாது.

?ஒரு குடும்பத்தில் மூத்தவனின் மனைவி விசாக நட்சத்திரத்தில் அமைந்தால் இளையவனுக்கு திருமணம் தடைபடும் என்கிறார்களே, இது சரியா? இதற்கு பரிகாரம் உண்டா?

– ரேகா ராதாகிருஷ்ணன், புத்தூர்.
இந்த கருத்து முற்றிலும் தவறானது. ஒருவருடைய ஜாதகமோ அல்லது ஜென்ம நக்ஷத்ரமோ மற்றவரை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. மூலத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது, கேட்டையில் பிறந்தால் மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகத்தில் பிறந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது, ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது, பூராடம் நூலாடாது என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் மட்டுமல்ல, மூட நம்பிக்கையும் கூட. இதுபோன்ற கருத்துக்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தவறான கருத்துக்களை நம்ப வேண்டிய அவசியமில்லை. விசாகத்தில் பிறந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதால் இதற்கு
பரிகாரம் என்பதும் கிடையாது.

?என்னதான் நாகரிகம் என்ற போர்வை சமூகத்தை மூடப் பார்த்தாலும் இன்னமும் சம்பிரதாயமும் சடங்கும் நிலைப் பெற்றிருப்பதன் காரணம் எது?

– விநாயகராமன், திசையன்விளை.
ஆன்மிகம்தான். ஆன்மிகம் என்பது இந்த உலகில் இருக்கும் வரை சம்பிரதாயமும் சடங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும். நமது தேசத்தின் ஆணிவேரே அன்பும் ஆன்மிகமும்தான். அன்பு இருக்கும் இடத்தில் ஆன்மிகம் என்பது தானாக இடம்பிடித்துவிடும். அதனால்தான் அன்பே சிவம் என்றார்கள். ஆங்கிலத்தில் love is god என்கிறார்கள். எங்கெல்லாம் உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என்பதை உலகத்தோர் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தியர்களிடையே அன்பு உணர்வு அதிகம் இருப்பதால் அங்கே ஆன்மிகமும் நிலைப்பட்டு நிற்கிறது. ஆன்மிகம் நிலைப்பட்டு நிற்பதால் சம்பிரதாயமும், சடங்குகளும் மாறாமல் இடம்பிடிக்கின்றன. நாகரிகம் மாறினாலும் இந்த அடிப்படை உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அருள்ஜோதி

 

The post கோயில் முகப்பிலும், சந்நதி முகப்பிலும் கஜலட்சுமி உருவம் பதிக்கப்பட்டு இருப்பதேன்? appeared first on Dinakaran.

Read Entire Article