சிவகங்கை, மே 13: சிவகங்கை அருகே ஒக்கூரில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மானாமதுரை-திருப்புத்தூர் சாலையில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 10 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் என மொத்தம் 27 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், பெரிய மாட்டு பிரிவுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் சிறிய மாட்டு பிரிவுக்கு, 6 கிலோ மீட்டர் தூரம் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்று எல்லைக்கோட்டை கடந்தன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.போட்டியினை, சிவகங்கை, சோழபுரம், மதகுபட்டி, நகரம்பட்டி, ஒக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
The post கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.