கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் குறிப்பிடக் கூடாது என்று அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து ஆலய பாதுகாப்புக் குழு மாநிலப் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட சாதியின் பெயர் மற்றும் சமுதாயக் குழுக்களின் பெயர்கள் குறிப்பிடக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அடிப்படையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் மற்றும் பாபநாசம் சுவாமி கோயில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்கள் அச்சிடப்படாது என கோயில் செயல் அலுவலர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.