கோயம்பேட்டில் 5 ஆண்டுகளாக கொலைமுயற்சி வழக்கில் தேடப்பட்டவர் கைது

1 week ago 4

அண்ணாநகர்: கோயம்பேட்டில் தனியார் உணவு விடுதி மேலாளரை கத்தியால் சரமாரி வெட்டிய கொலைமுயற்சி வழக்கில் தலைமறைவாகி, கடந்த 5 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த நபர் வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல பேருந்துக்கு காத்திருந்தபோது, நேற்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு (50). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் விடுதி உணவகத்தின் மேலாளராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2019ம் ஆண்டு விடுதி உணவக கல்லாப் பெட்டியில் வைத்திருந்தரூ.4 ஆயிரம் காணாமல் போனது. இதுதொடர்பாக சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து அன்பு விசாரணை மேற்கொண்டார். இதில், அதே பகுதியை அழகுராஜா (33) என்பவர் பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. அவரிடம் பணத்தை பறிமுதல் செய்து சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆத்திரமான அழகுராஜா, விடுதி உணவக மேலாளர் அன்புவை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இப்புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவான அழகுராஜாவை தீவிரமாக வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அழகுராஜா, நேற்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளிமாநிலத்துக்கு தப்பி செல்லும் வகையில் பேருந்துக்கு காத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை கண்டதும் அழகுராஜா தப்பியோட முயற்சித்தார். அவரை போலீசார் விரட்டி சென்று, மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் முன்விரோத தகராறில் தனியார் விடுதி உணவக மேலாளரை கத்தியால் சரமாரி வெட்டியதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கைதான அழகுராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கோயம்பேட்டில் 5 ஆண்டுகளாக கொலைமுயற்சி வழக்கில் தேடப்பட்டவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article