அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்ததற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அங்காடி நிர்வாகத்துக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை கடந்த 9ம்தேதி தொடங்கி விற்பனை நடந்து வந்தது. இந்த சிறப்பு சந்தை நேற்றுடன் நிறைவுபெற்றது. இனிமேல் இங்கு பொருட்கள் விற்பனை செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் சிறப்பு சந்தையில் அனைத்து பொருட்களும் எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஏற்பாடு செய்திருந்தார். மேலும், சிறப்பு சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது. சிறப்பு சந்தைக்கு கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து கரும்புகள் வந்தன. இதேபோல் ஆந்திராவில் இருந்து மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாணியம்பாடி பகுதிகளில் இருந்து தோரணைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி வினோத்குமார் கூறுகையில், ‘‘இந்த வருடம் சிறப்பு சந்தை சிறப்பாக நடந்தது. அங்காடி நிர்வாகத்தினர் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தனர். கடந்த வருடம் சிறப்பு சந்தைக்கு 420 வாகனங்களில் கரும்பு கட்டுகள், 150 வாகனங்களில் இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துகள் வந்தன. இந்த வருடம் சிறப்பு சந்தைக்கு கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து வரத்து அதிகரித்து சுமார் 500க்கும் மேற்பட்ட கரும்பு வாகனங்களும், 250க்கும் மேற்பட்ட மஞ்சள், இஞ்சி கொத்து வாகனங்களும் வந்தன. வியாபாரம் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் நடந்து அதிக லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த வருடம் சிறப்பு சந்தையை சிறப்பாக அமைத்து கொடுத்து வியாபாரிகளுக்கு அதிக லாபம் ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்திமதி மற்றும் அதிகாரிகளுக்கு வியாபாரிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தையில் இந்தாண்டு விற்பனை அமோகம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு வியாபாரிகள் நன்றி appeared first on Dinakaran.