கோபி சுற்றுவட்டாரத்தில் ரூ.35 கோடிக்கு நெல் கொள்முதல்

3 months ago 11

*விவசாயிகள் மகிழ்ச்சி

கோபி : கோபி பகுதியில் கடந்த 20 நாட்களில் ரூ. 35 கோடிக்கு விவசாயிகளிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கோபி அருகே உள்ள தடப்பள்ளி,அரக்கன்கோட்டை பாசன பகுதியில் ஆண்டு தோறும் 24,500 ஏக்கரில் நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு அறுவடை காலங்களிலும் பாசன பகுதிகளான புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, துறையம்பாளையம், டி.என்.பாளையம்,நஞ்சகவுண்டன்பாளையம், கூகலூர், மேவாணி, பெருந்தலையூர், புதுக்கரைபுதூர், புதுவள்ளியாம் பாளையம், காசிபாளையம் உள்ளிட்ட 34 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெறப்படும் சன்றிதழ் அடிப்படையில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் பணமும் செலுத்தப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் தனியரிடம் விற்பனை செய்வதை விட அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நெல்லை விற்பனை செய்யவே விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல்போக சாகுபடி முடிந்து அறுவடை தொடங்கியதும் கடந்த 5ம் தேதி 34 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் நடைபெற்றது.இதில் முதல் ரகம் கிலோவுக்கு ரூ.24.50க்கும், பொது ரகம் கிலோவுக்கு ரூ.24.05க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்த 20 நாளில் முதல் ரகம் 2 ஆயிரத்து 486 டன் நெல் 6 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கும், பொது ரகம் 11 ஆயிரத்து 653 டன் 28 கோடியே 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 34 கோடியே 11 லட்சம் ரூபாய்க்கு 14 ஆயிரத்து 139 டன் நெல் இது வரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

இன்னும் 10 நாட்கள் நெல்கொள்முதல் மையங்கள் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடத்தில் இருந்து அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோபி சுற்றுவட்டாரத்தில் ரூ.35 கோடிக்கு நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Read Entire Article