கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில்

1 week ago 4


சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: உமா மகேஸ்வரர் கோயில், கோனேரிராஜபுரம், மயிலாடுதுறை மாவட்டம்.

காவிரி தென்கரைத் தலங்களில் 34ஆவது சிவத்தலமான இக்கோயில், சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற பெருமை கொண்டது. இதன் மூலம் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததை அறியலாம்.சோழ நாட்டில் ஏராளமான செங்கற்தளி ஆலயங்களை கற்றளிகளாக உருவாக்கிய சிவ நெறிச்செல்வியான செம்பியன் மாதேவியார் (பொ.ஆ.910-1001/கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி) இக்கோயிலைக் கற்றளியாக்கினார். இக்கோயிலில் செம்பியன் மாதேவி சிவபெருமானை வழிபடும் சிற்பம் உள்ளது.

இக்கோயிலின் தென்புறச்சுவரில் ஒரு சிற்பத்தொகுதியும், கல்வெட்டும் உள்ளன. சிற்பத்தில் ஒரு லிங்கத்திருமேனிக்கு அர்ச் சகர் ஒருவர் ஆடை சுற்றிக்கொண்டிருக்க எதிரே கால்களை மடித்து அமர்ந்த நிலையில் வணங்கும் கோலத்தில் கண்டராதித்தர் உள்ளார்.உத்தம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது. செம்பியன் மாதேவி திருநல்லத்தில் கற்கோயிலைக் கட்டியதாகவும், உத்தம சோழனின் 3 ஆம் ஆண்டில், “ஸ்வஸ்தி ஸ்ரீ  மதுராந்தக தேவரான உத்தம சோழன்…” என்று தொடங்கும் கல்வெட்டு, இரண்டு வேலி நிலத்தை பூந்தோட்டத்திற்காக நிவந்தமளித்ததைக் குறிப்பிடுகிறது.

அழகிய ஆடல்வல்லான், பிட்சாடனர், விநாயகர் மற்றும் அகஸ்திய முனிவர் தனிச்சிற்பங்கள் உள்ளன. முற்காலச் சோழர்காலக் கோயில்களைப் போலவே, கீழே மிக நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. அவற்றில் கஜசம்ஹார மூர்த்தி குறிப்பிடத்தகுந்தது.கோனேரிராஜபுரத்தில் உலகிலேயே மிக உயரமானதாகக் கருதப்படுகிற பெரிய உலோக வார்ப்பு நடராஜர் சிற்பம் உள்ளது. தம்முடைய மேனியில், மனிதனுக்கு உள்ளது போன்றே ரேகைகள், மச்சம், மரு, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். நல்ல அமைதியான சூழலில் உள்ள இக்கோயில், பாதபந்த வகை அதிஷ்டானம், ஏக தள விமானத்துடன் அமைந்துள்ளது.இக்கோயிலின் இறைவன் உமாமகேஸ்வரர், பூமிநாதன்.
இறைவி தேகசௌந்தரி, அங்கவள நாயகி என்றழைக்கப்படுகின்றனர்.

மது ஜெகதீஷ்

The post கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Read Entire Article