கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட கோத்தர் இன பழங்குடியின மக்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் தங்களின் குலதெய்வ பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இக்கோயில் விழாவில் கோத்தர் இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அய்னோர், அம்னோர் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படைப்பர்.
நாளைய தினம் பொங்கல் வைத்து பண்டிகையை சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் இவர்களின் பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கோத்தர் இன மக்களின் பூர்வக்குடி கோயிலான கோத்தகிரியின் மையப்பகுதியான நேரு பூங்காவில் அமைந்துள்ள அய்னோர், அம்னோர் குலதெய்வ கோவிலிற்கு தங்களின் கிராமமான புதுக்கோத்தகிரி கிராமத்திலிருந்து ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என தங்களின் பாரம்பரிய வெள்ளை நிற உடை அணிந்து,
தங்களின் கலாச்சார இசை இசைத்து ஊர்வலமாக நடந்து வந்து அய்னோர், அம்னோர் கோவிலிற்கு வந்து தங்களின் குல தெய்வத்திற்கு விளக்கேற்றி தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் எவ்வித நோய் நொடி இன்றி வாழ சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்.
திருவிழாவில் கோத்தர் இன பழங்குடியின ஆண்கள் தங்களின் பாரம்பரிய கலாச்சார இசை இசைத்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு விடுமுறையையொட்டி கோத்தகிரி நேருபூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்து புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.
The post கோத்தர் இன பழங்குடியினரின் அய்னோர், அம்னோர் திருவிழா appeared first on Dinakaran.