கோத்தகிரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

7 hours ago 1

கோத்தகிரி : கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார்.

நெக்கிகம்பையில் உள்ள நியாய விலைக்கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் இருப்புகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோத்தகிரி காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 15-வது நிதிக்குழுவின் மானிய திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டட பணிகளை பார்வையிட்டு, மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்துகளின் இருப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பு அமைந்துள்ள முதல்வர் மருந்தக கடையில் உள்ள மருந்துகளின் இருப்புகள் குறித்தும், கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலையில், பொதுமக்களுக்கு விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கலெக்டர் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க கடையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயக் கருவிகள் உள்ளிட்டவை இருப்புகள் குறித்தும், மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து, நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கோத்தகிரி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், கோத்தகிரி வட்டார மேலாண்மை அலகின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

காந்தி மைதானத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கணினி அறை, எழுதுபொருட்கள் வைப்பு அறை, பதிவறை, பயிற்சி அறை உள்ளிட்ட அறைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களின் இருப்புகள் குறித்து நேரில் பார்வையிட்டு, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அரவேணு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் விவரங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சி அலுவலகத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் விவரங்கள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

பின்னர் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, கலெக்டர் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.11.44 லட்சம் மதிப்பில் பழங்குடியினருக்கான வீட்டு மனை பட்டாக்களையும், 12 பயனாளிகளுக்கு ரூ.14,400 மதிப்பில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் திரட்டப்பட்ட நன்கொடை மற்றும் இணை மானியம் ஆகிய ஒருங்கிணைந்த தொகையில் இருந்து, 25 பயனாளிக்கு தலா ரூ.20,000 வீதம், காசோலையையும் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.16.83 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அப்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் குப்புராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) தீபா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, கோத்தகிரி நகராட்சி ஆணையாளர் (பொ) இளம்பரிதி, வட்டாட்சியர்கள் ராஜலட்சுமி (கோத்தகிரி), கலைச்செல்வி (பழங்குடியினர் நலன்), கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article